அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் என்பவற்றை இலங்கை கையாள வேண்டும் என நாமோ அல்லது சர்வதேச சமூகமோ கூற முன்னர் இலங்கை மக்களே வலியுறுத்தினர். சகல இன, மத மக்களின் உரிமைகளையும் பாதுகாக்காது விட்டால் நாடாக முன்னோக்கி செல்ல முடியாது என இலங்கைக்காக அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற வடக்கு மக்களின் கேள்விக்கு பதில் தெரிவித்தாக வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த மே 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுமக்களின் அமைதியான போராட்டங்களை குழப்பும் இவ்வாறான வன்முறைகளை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். அதுமட்டுமல்ல மாற்றம் ஒன்று வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர். அதனை கருத்தில்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் நிலையான, ஜனநாயக நாடொன்றை கட்டியெழுப்ப வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அவ்வாறான ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே எமதும் விருப்பமாக உள்ளது. இந்த பொதுவான நோக்கத்திற்காக சகலரும் செயற்பட வேண்டும். நாடாக ஐக்கியப்படவும், சரியான பாதையில் பயணிக்கவும் இதுவே சரியான தருணம் என கருதுகின்றோம்.

ஜனநாயகத்தை பலப்படுத்த வேண்டுமாயின் நாட்டில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். சட்ட ஒழுங்கு பின்பற்றப்பட வேண்டும். ஊடக சுதந்திரம் காணப்பட வேண்டும். இலங்கை விடயத்தில் அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் என்பவற்றை கையாள வேண்டும் என நாமோ அல்லது சர்வதேச சமூகமோ கூற முன்னர் இலங்கை மக்களே வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நாட்டில் சகல இன, மத மக்களின் உரிமைகளையும் பாதுகாக்காதுவிட்டால் நாடாக முன்னோக்கி செல்ல முடியாது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற வடக்கு மக்களின் கேள்விக்கு பதில் தெரிவித்தாக வேண்டும். இதனை அறியவே பல்வேறு சுயாதீன ஆணைக்குழுக்கள், அமைப்புகள் உருவாக்கப்பட்டு சுயாதீனமாக அவர்களின் பணியை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.