இலங்கை மின்சாரசபை தலைவர் பெர்டினாண்டோ இராஜினாமா – பிரதித் தலைவர் நலிந்த இலங்ககோன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவில் (கோப்) தெரிவித்த கருத்தை வாபஸ் பெறுவதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினான்டோ அறிவித்தார்.

கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் திகதி ஜனாதிபதி தன்னை அழைத்து 500 மெகாவோட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்ய அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் உடன் முன்மொழியப்பட்ட மன்னார் மற்றும் பூனேரி காற்று மற்றும் சூரிய சக்தி திட்டம் ஆகிய  செயற்றிட்டங்களை அதானி நிறுவனத்திடம் வழங்குமாறு தெரிவித்ததாக கோப் குழுவில் ஆஜராகிய இலங்கை மின்சார சபையின் தலைவர் குறிப்பிட்டிருந்ததுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அழுத்தம் விடுத்ததாகவும் அவர் விசாரணையின் போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.