இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழுத்தத்தின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  செயற்பட்டதாக இலங்கை அதிகாரி ஒருவர் கூறிய சர்ச்சைக் கருத்து தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ளதாக அதானி குழுமம் தெரிவித்தது.

500 மெகாவோட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்யவதற்காக அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் உடன் முன்மொழியப்பட்ட மன்னார் மற்றும் பூனேரி காற்று மற்றும் சூரிய சக்தி திட்டம் தொடர்பாக கோப் குழுவில் கடந்த வெள்ளிக்கிழமை (10) கருத்து வெளியிடப்பட்டது.

சர்ச்சைக்குரிய கருத்து குறித்து, அதானி குழுமத்தின் ஊடகப் பேச்சாளர் வெளியிட்ட பதில் தொடர்பிலேயே இந்திய ஊடகங்களில் வெளியான செய்தியில் மேற்குறிப்பிட்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் முதலீடு செய்வதற்கான எங்களின் நோக்கம் மதிப்புமிக்க அண்டை நாடுகளின் தேவைகளை நிவர்த்தி செய்வதாகும் என்றும்  ஏற்கெனவே இந்த விவகாரம் இலங்கை அரசாங்கத்தால் அதற்குள்ளேயே பேசப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை என்று அதானி குழுமத்தின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

காற்றாலை மின் திட்டத்தை நேரடியாக அதானி குழுமத்துக்கு வழங்குமாறு பிரதமர் மோடி தனக்கு அழுத்தம் கொடுத்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்ததாக கோப் குழுவில் கருத்து வெளியிட்டு மூன்று நாட்களுக்குப் பின்னர், இலங்கையின் இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ இராஜினாமா செய்தார் என்றும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாலை, அந்த அதிகாரியின் கருத்தை ஜனாதிபதி உறுதியாக மறுத்துள்ளார் என்றும் அதற்கு அரசாங்கம் எதிர்வினையாற்றவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் 500 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் தொடர்பாக அவரின் கூற்று காணப்படுவதாக செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் திகதி ஜனாதிபதி, தன்னை அழைத்து இந்த செயற்றிட்டத்தை அதானி நிறுவனத்திடம் வழங்குமாறு தெரிவித்ததாக கோப் குழுவில் ஆஜராகிய போது அவர் குறிப்பிட்டிருந்ததுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அழுத்தம் விடுத்ததாகவும் சிங்கள மொழியில் குறிப்பிட்டிருந்தார் என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் குளறுபடிகள் தற்போது பாக்கு நீரிணையையும் கடந்து இலங்கை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளதாக இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ராகுல் காந்தியும் குற்றஞ்சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.