ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானி ஒருவரின் சமயோசிதத்தால் நடுவானில் ஏற்பட்ட இருந்த பாரிய விமான விபத்து தடுக்கப்பட்டுள்ளதுடன், விமானமும் பாதுகாப்பாக கொழும்பை வந்தடைந்துள்ளது. திங்கட்கிழமை (13) பிற்பகல் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து 275 பயணிகளுடன் புறப்பட்ட யூஎல்504 என்ற விமானம், 30,000 அடி உயரத்தில் கொழும்பு நோக்கி பறந்து கொண்டிருந்தது.

துருக்கி வான் பரப்பில் விமானம் பறந்த போது, விமானத்தை 35,000 அடி உயர்த்துக்கு உயர்த்துமாறு துருக்கியின் அங்காரா நகரின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் உத்தரவிட்டனர்.

எவ்வாறாயினும், லண்டனில் இருந்து டுபாய் ஊடாக சிங்கப்பூர் செல்லும் பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானம் அதே உயரத்தில் பயணிப்பதாக இலங்கை விமானி, துருக்கிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளருக்குத் தெரிவித்தார்.

தொடர்பாடல் இருந்தபோதிலும், அங்காரா விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் தமது ரேடார் திரையில் குறிப்பிட்ட உயரத்தில் விமானம் எதுவும் இல்லை எனவும், ஸ்ரீலங்கன் விமானத்தை 35,000 அடி உயரத்துக்கு உயர்த்த வேண்டும் எனவும் பலமுறை அறிவித்துள்ளார்.

அங்காரா கட்டுப்பாட்டு அதிகாரிகள் மீண்டும் தங்கள் ராடார் திரையை சரிபார்க்க வேண்டும் என்று ஸ்ரீலங்கன் விமானி மீண்டும் வலியுறுத்திய சில நிமிடங்களுக்குப் பின்னர், துருக்கிய அதிகாரி, ஸ்ரீலங்கன் விமானியைத் தொடர்புகொண்டு, 35,000 அடியில் பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானம் இருப்பதால் விமானத்தை உயர்த்த வேண்டாம் என்று அவருக்குத் தெரிவித்தார்.

அங்காராவிலுள்ள அதிகாரிகளின் உத்தரவின்படி, இலங்கை விமானி விமானத்தை உயர்த்தியிருந்தால், இரண்டு விமானங்களும் மோதி பாரிய விபத்து நடந்திருக்கும்  என விமானத் துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.