குறைந்த பணியாளர்களுடன் நீதிமன்ற நடவடிக்கைகளை (திங்கள் முதல் வௌ்ளி வரை) முன்னெடுக்குமாறு நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழுவின்  செயலாளர், சகல நீதிமன்றங்களின் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கான அறிவிப்பை நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் எச்.சஞ்ஜீவ சேமரத்ன, இன்று (16) விடுத்துள்ளார்.

கொவிட் தொற்றுநோயினால் 2020 மார்ச் மாதம் முதல் 2022 வருடம் ஆரம்பம் வரையிலும், நீதிமன்ற நடவடிக்கைகளை சாதாரண முறைமையின் கீழ் முன்னெடுக்கமுடியாத நிலைமையொன்று ஏற்பட்டிருந்தது.

அதனால், பெரும் எண்ணிக்கையிலான வழக்குகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அவ்வாறான வழக்குகளை அழைப்பதற்கான திகதிகள்,  உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாக வைத்தே, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளாந்த செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், அத்தியாவசியத்தை கவனத்தில் கொண்டு ஆகக் குறைந்த அதிகாரிகளை மட்டுமே சேவைக்கு அழைக்கும் வகையில் முறையான வேலைத்திட்டமொன்றை தயாரித்து, கிழமை நாட்களில் மட்டுமே நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.