இலங்கைக்கு எதிராக நியூயோர்க்கில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் ஹமில்டன் ரிசர்வ் வங்கி வழக்கு தாக்கல் செய்துள்ளது என, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜூலை 25ஆம் திகதி முதிர்ச்சியடையும் 250 மில்லியன் டொலர்இறையாண்மைப் பத்திரங்களைக் கொண்டுள்ள ஹமில்டன் ரிசர்வ் வங்கி, 5.875 சதவீத வட்டியில் முதலீடு செய்துள்ளது.

இலங்கைக்கு வழங்கிய சர்வதேச இறையாண்மை பத்திரங்களின் முழுத் தொகையையும் ஜூலை 25 ஆம் திகதிக்குள் வட்டியுடன் செலுத்துமாறு உத்தரவிடக் கோரியே ஹமில்டன் ரிசர்வ் வங்கி வழக்கு தாக்கல் செய்துள்ளது.

இலங்கையின் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பதற்கு, ராஜபக்ஷ குடும்பத்தினர் உள்ளிட்ட இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் திட்டமிட்டு ஏற்பாடு செய்ததாக செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸில் உள்ள ஹமில்டன் ரிசர்வ் வங்கி தாக்கல் செய்த வழக்கில், சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளின் போது உள்ளூர் வங்கிகளின் இறையாண்மைப் பத்திரங்கள் குறித்து கவனம் செலுத்தத் தவறிவிட்டதாகவும் இது, இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளால் திட்டமிடப்பட்ட செயல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூர் வங்கிகள் மற்றும் ஆர்வமுள்ள தரப்பினர் வைத்திருக்கும் இறையாண்மைப் பத்திரங்கள் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் இருந்து விலக்கப்பட்டதாக வங்கி குற்றம் சாட்டியுள்ளது.

இரண்டு சர்வதேச இறையாண்மை பத்திரங்களுக்கு வட்டி செலுத்துவதற்கான 30 நாட்கள் கால அவகாசம் கடந்த மாதத்துடன் முடிவடைந்த நிலையில், இலங்கை உத்தியோகபூர்வமாக கடனை செலுத்தாத நாடாக மாறியது.

இலங்கை சுதந்திரமடைந்ததற்குப் பின்னர் இலங்கை சர்வதேச இறையாண்மைப் பத்திரங்களைத் திருப்பிச் செலுத்தாமை இதுவே முதல் முறை என்று தெரிவிக்கப்படுகிறது.