சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற 399 பேர் இலங்கை பொலிஸார் மற்றும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் கைது செய்யப்பட்ட குறித்த
சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிஹால் தல்துவ தெரிவித்தார்.

சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயல்வோரிடம் இருந்து 200,000 ரூபாய் முதல் 1,000,000 ரூபாய் பணத்தை ஆட்கடத்தல்காரர்கள் பெற்றுக்கெள்வதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

ஆட் கடத்தல்காரர்கள் பழுதடைந்த படகுகளையும் உடைந்த படகுகளையும் சட்டவிரோத நடவடிக்கைகளில் பயன்படுத்துவதாகவும் இதன் மூலம் உயிராபத்துக்கள் அதிகம் ஏற்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடத்தல்காரர்களுக்கு 1 முதல் 5 வருட வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் பொலிஸ் பேச்சாளர் எச்சரித்துள்ளார்.