உலக வங்கியின் உள்ளூர் அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபையினால் நிர்மாணிக்கப்படவுள்ள நாவற்குடா பொதுச்சந்தை கட்டட தொகுதிக்கான அடிக்கல் நாட்டு வைபவம் மட்டு.மாநகர சபை ஆணையாளர் நாகராஜா மதிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக மட்டகளப்பு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக மட்டு. மாநகர சபை உறுப்பினரும் , ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான ம.நிஸ்கானந்தராஜா (சூட்டி) , மட்டு. மாநகர சபை உறுப்பினர் த.இராஜேந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

மட்டக்களப்பு நகரை அண்டிய நாவற்குடா, மஞ்சந்தொடுவாய் பிரதேசங்களை வர்த்தக ரீதியாக முன்னேற்றும் நோக்கிலும் இப்பிரதேச உற்பத்தியாளர்களுக்கு சந்தைப்படுத்தும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் இக் கட்டிட தொகுதி அமைக்கப்படுகிறது.

விற்பனை கடைகள் மற்றும் கலாசார மண்டபம் ஆகியவற்றை உள்ளடக்கி இரு கட்டடங்களாக மேற்படி இச் சந்தை கட்டிட தொகுதி நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதன் ஆரம்ப கட்ட பணிகள் உலக வங்கியின் உள்ளூர் அபிவிருத்தி செயற்திட்டத்தின் பங்களிப்புடன் 3 கோடியே 10 இலட்சம் ரூபா செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது.