இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர்  மிசுகோஷி ஹிடாகிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்குமிடையில் இன்றுமாலை யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள தனியார் விடுதியில் சந்திப்பு இடம்பெற்றது.

இதில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்ற இச்சந்திப்பின்போது சமகால அரசியல் நிலைமைகள், தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது, இன்றைய பொருளாதார நெருக்கடி நிலைக்கான அடிப்படைக் காரணம் இனப்பிரச்சினை தீர்க்கப்படாமையே என்பதையும், அரசாங்கத்தின் தவறான நிர்வாகமுறைமையுமே இந்நிலைமைக்கு நாட்டை கொண்டு சென்றுள்ளது என்பதையும் எடுத்துக் கூறிய கூட்டமைப்பினர் அரசாங்கத்தை விடுத்து இதனால் கஷ்டப்படுகின்ற மக்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டனர்.

இச்சந்திப்பில் ஜப்பானிய தூதரக அரசியல் பிரதிநிதி உள்ளிட்ட ஜப்பானிய தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.