ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக எதிர்வரும் காலங்களில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை மஹிந்தானந்த எம்.பி குறிப்பிட்டார்.

ஜனாதிபதிக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையில் எரிபொருள் கொள்வனவு ஒப்பந்தம் செய்வதற்காக, தொலைபேசியில் உரையாடுவதற்கு வசதியாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவருடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஜூலை 10ஆம் திகதிக்குப் பின்னர் தொடர்ந்து எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்கான விரிவான பொறிமுறையை அரசாங்கம் வகுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவில் இருந்து எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காக இந்தியப் பிரதமர், பெற்றோலிய வள அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன்  ஜனாதிபதி, தொடர்ந்தும் தொடர்பில் இருப்பதாக மஹிந்தானந்த எம்.பி குறிப்பிட்டார்.

இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்யும் ஏழு நிறுவனங்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடியதாகவும், எரிபொருள் விநியோகம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.