யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகத்திற்கான விமான சேவையினை இன்று (01) முதல் மீள ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ள போதிலும் குறித்த விமான சேவை மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் 2019 ஆம் ஆண்டு நம்பர் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகத்திற்கான விமான சேவைகள் 2020 ஆம் ஆண்டு வரை முன்னெடுக்கப்பட்ட நிலையில், COVID தொற்று காரணமாக மீண்டும் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குறித்த விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.
இதனிடையே, யாழ்ப்பாணம் விமான நிலையத்திலிருந்து தென்னிந்தியாவிற்கான விமான சேவைகளை மீள ஆரம்பிக்க பல்வேறு தரப்பினரும் முயற்சித்து வந்த நிலையில், உள்ளூர் , வௌியூர் விமான சேவை நிறுவனங்களும் தமிழக விமான சேவைக்கான கோரிக்கையினை சமர்ப்பித்திருந்தன.
இந்த நிலையில், யாழ். பலாலி விமான நிலையத்திலிருந்து இன்று முதல் தமிழகத்திற்கான விமான சேவையினை ஆரம்பிக்க துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
அத்துடன், கடந்த மாதம் 15 ஆம் திகதி பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியிருந்தார்.
ஜூன் 18 ஆம் திகதி யாழ். பலாலி விமான நிலையத்திற்கு விஜயம் செய்த சிவில் விமான சேவைகள், கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஜூலை முதலாம் திகதி பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படுமென தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று மீள ஆரம்பிக்கப்படவிருந்த விமான சேவை தொடர்பில் கடற்றொழில் அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் வினவினர்.
இந்திய தரப்பில் உள்ள எரிபொருள் பிரச்சினை மற்றும் சட்டச்சிக்கல்கள் காரணமாக பிற்போட நேர்ந்ததாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.