வெடிகுண்டு மிரட்டல் தொடர்பிலான கடிதம் குறித்து, ஜே.வி.பியின் தலைவரும் எம்.பியுமான அனுரகுமார திஸாநாயக்க, கொழும்பில் இன்று (04) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது பல கோணங்களில் கேள்வியெழுப்பினர். அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெளிவுப்படுத்திய அனுரகுமார திஸாநாயக்க,
ஜூலை 5 அல்லது 6 ஆம் திகதிகளில் ஆரம்பமாக விருக்கும் கரும்புலிகள் தினத்தை இலக்காக வைத்து, வடக்கில் அல்லது தெற்கில் குண்டு வெடிக்க வாய்ப்பு இருப்பதாக வெளிநாட்டு புலனாய்வு அமைப்பை குறிப்பிட்டு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
2022 ஜூன் 27 ஆம் திகதியன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவுக்கு பொலிஸ் மா அதிபர் சி.ரி.விக்ரமரத்னவுக்கு “வெடிகுண்டு மிரட்டல்” கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் செய்யப்பட்டதாக காரணங்களை காண்பிக்கும் வகையிலேயே அவை முன்னெடுக்கப்படவிருக்கின்றன என்றும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
ஆகையால், தற்போதைக்கு யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், பிரமுகர்கள் ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் பொது வைபவங்களில் பங்கேற்க வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது என ஊடகவியலாளர் சந்திப்பில் எடுத்துரைத்தார்.
ஆகையால், அந்த வெளிநாட்டு புலனாய்வு சேவைக்கு எவ்வாறு தகவல்கள் கிடைத்தன. உபாயங்கள் என்ன? அதன் உண்மைத்தன்மை என்ன? என்பது தொடர்பில் மக்களுக்கும் நாட்டுக்கும் அரசாங்கம் தெளிவுப்படுத்தவேண்டும்.
இல்லையேல் அரசாங்கத்துக்கு எதிராக வலுக்கும் போராட்டங்களை முடக்கும் வகையில் இவ்வாறான செய்திகள் தயாரிக்கப்பட்டனவா? என்றும் அனுரகுமார திஸாநாயக்க கேள்வியெழுப்பினார்.