இலங்கை மக்களை திருப்திப்படுத்தும் நீண்ட கால பொருளாதார மற்றும் அரசியல் தீர்வுகளை அடைவதற்கு விரைவாக செயற்படுமாறு இலங்கையின் அரசியல் கட்சிகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.

அரசியல் கட்சியின் முன்னேற்றத்துக்காக அல்லாமல் இலங்கையின் முன்னேற்றத்துக்காக இலங்கை பாராளுமன்றம் பாடுபட வேண்டுமென அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர், இன்று (10) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் புதன்கிழமை (13) பதவி விலகத் தயாராகி வரும் நிலையில், தேசத்தின் முன்னேற்றத்துக்கான அர்ப்பணிப்புடன் இந்த தருணத்தை அணுகுமாறு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது என பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நீண்ட கால பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கும், மின்சாரம், உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட மோசமான பொருளாதார நிலைமைகள் தொடர்பாக இலங்கை மக்களின் அதிருப்தியை நிவர்த்தி செய்வதற்கும் தீர்வுகளை கண்டறியவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தீர்வுகளை கண்டறிந்து நடைமுறைப்படுத்துவதற்கு இந்த அரசாங்கத்தையோ அல்லது அரசியலமைப்பு ரீதியாக தெரிவுசெய்யப்படும் எந்தவொரு புதிய அரசாங்கத்தையும் துரிதமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்வதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கை மக்களுக்கு அமைதியான முறையில் குரல் எழுப்ப உரிமை உள்ளது என்றும் போராட்டம் தொடர்பான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட எவரையும் முழுமையாக விசாரணை செய்யவும், கைது செய்யவும் மற்றும் வழக்குத் தொடரவும் தாம் அழைப்பு விடுப்பதாக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்

போராட்டக்காரர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு அமெரிக்கா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், சனிக்கிழமை போராட்டத்தின் போது இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் பிரதமரின் இல்லத்துக்கு தீ வைத்தமைக்கு அதிருப்தி வெளியிட்டுள்ளது.