காங்கேசன்துறை – முறிகண்டி இடையேயான யாழ் ராணி தொடருந்து சேவை நாளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படுகிறது என யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலைய தலைமை அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார்.

இந்த சேவை தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;

காங்கேசன்துறைக்கும் முறிகண்டிக்கும் இடையே குறுகிய தூர தொடருந்து சேவை நாளை ஆரம்பிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் முதன்மை ரயில் நிலையத்தில் நாளை திங்கட்கிழமை காலை 6.40 மணியளவில் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு இடம்பெறும்.

காங்கேசன்துறை – முறிகண்டி இடையே அனைத்து ரயில் நிலையங்களிலும் நிறுத்தப்பட்டு பயணிகள் சேவையில் யாழ்.ராணி தொடருந்து இயக்கப்படும். தினமும் இரண்டு சேவைகள் இடம்பெறும்.

காங்கேசன்துறையிலிருந்து முறிகண்டி நோக்கி காலை 6 மணிக்கு சேவை ஆரம்பிக்கப்படுவதுடன், கிளிநொச்சியிலிருந்து காங்கேசன்துறை நோக்கி முற்பகல் 10 மணிக்கு சேவை ஆரம்பிக்கப்படும்.

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு ஒரு வழிக் கட்டணமாக மூன்றாம் வகுப்புக்குரிய 90 ரூபாய் கட்டணமும் யாழ்ப்பாணத்திலிருந்து பளைக்கு 60 ரூபாயும் யாழ்ப்பாணத்திலிருந்து கொடிகாமத்துக்கு 35 ரூபாயும் கட்டணம் அறவிடப்படும் – என்றார்.