இலங்கையின் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இலங்கையை விட்டு வெளியேறி அமெரிக்காவுக்கு பயணமாகியுள்ளார் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையில் தசாப்தங்களாக இருந்த ராஜபக்ஷர்களின் ஆட்சி முடிவுக்கு வரும் எனவும் பிபிசி தெரிவித்துள்ளது.

குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அரசியல் பிரமுகர்கள், நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில், கட்டுநாயக்க மற்றும் மத்தளை சர்வதேச விமான நிலைய முக்கிய பிரமுகர் சேவையில் கடமையாற்றும் அதிகாரிகள் தமது கடமைகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் சங்கம், செவ்வாயக்கிழமை (12) தெரிவித்தது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தும் பட்டுப்பாதை (சில்க் ரூட்) நுழைவாயில் ஊடாக, பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற முன்றபோதே அதிகாரிகள் கடமையில் இருந்து விலகியிருந்தனர்.

மத்தளை விமான நிலையத்தின் ஊடாக நாட்டை விட்டு வெளியேறுவதற்கு பசில் ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்த காரணத்தால் அந்த விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர் சேவையிலிருந்தும் விலகுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், செவ்வாய்க்கிழமை (12) மாலை அறிவித்திருந்தனர்.

எனினும், இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டுள்ள பசில், அமெரிக்க கடவுச்சீட்டை வைத்திருப்பதன் காரணத்தினால் அமெரிக்க பிரஜை ஒருவரின் பயணத்துக்கு தடை விதிப்பதற்கு அதிகாரிகளுக்கு முடியாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன் அடிப்படையிலேயே நாட்டை விட்டு வெளியேறுவதற்கு பசிலுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.