ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார். கடிதம் கிடைத்ததை சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ளதுடன், அதன் சட்டபூர்வ தன்மை குறித்து ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இதன்பின்னர் நாளைய தினம் ஜனாதிபதியின் இராஜினாமா உத்தியோகப்பூர்வமான அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூர் சென்றடைந்தவுடன் தனது இராஜினாமா கடிதத்தை சமர்பிப்பதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

குறித்த இராஜினாமா கடிதத்தை 13ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் வழங்குவதாக ஜனாதிபதி தம்மிடம் தெரிவித்ததாக சபாநாயகர் முன்னர் குறிப்பிட்டார்.

அதனையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,முதல் பெண்மணி மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று அதிகாலை இலங்கை விமானப்படைக்கு சொந்தமான Antonov 32 ரக விமானத்தில் மாலைதீவுக்கு சென்றுள்ளனர்.

மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்ல ஜனாதிபதி மற்றும் குழுவினர் எதிர்பார்த்திருந்த போதிலும், நேற்றைய தினம் அந்த பணியை அவர்களால் முடிக்க முடியாமல் போனதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாலத்தீவில் இருந்து சிங்கப்பூருக்கு நேற்று இரவு இரண்டு விமானங்கள் புறப்பட்டிருந்த போதிலும், கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது குழுவினர் அதில் பயணிக்கவில்லை.

அவர் சிங்கப்பூர் சென்றடைந்தவுடன் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்புவார் என்றும் ஏற்கெனவே செய்தி வெளியானது.

இதேவேளை, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் செல்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர் புகலிடம் கோரவில்லை எனவும், வேறு எந்த பாதுகாப்பும் வழங்கப்படவில்லை எனவும் அமைச்சு அறிவித்துள்ளது. பொதுவாக, புகலிடக் கோரிக்கைகளுக்கு வாய்ப்பளிக்காத நாடாக சிங்கப்பூர் கருதப்படுகிறது.