நாட்டை விட்டு தப்பிச்சென்றிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (ஜி.ஆர்) தனது மனைவி மற்றும் மெய்ப்பாதுகாவலர்கள் இருவருடன் ஜித்தாவுக்கு பறக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் சர்வதேச ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளனர்.

மாலைதீவுக்கு தப்பிச்சென்றிருக்கும் இவர்கள், அங்கிருந்த தனி விமானத்தின் ஊடாக, சிங்கபூர் சென்றடைந்துள்ளனர்.

 சிங்கப்பூரில் இருந்தே சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தாவுக்கு செல்லவிருப்பதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றிற்காக நாட்டிற்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் புகலிடம் கோரி விண்ணப்பிக்கவில்லை என்றும் அவருக்கு புகலிடம் வழங்கப்படவில்லை என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் சிங்கப்பூர் பொதுவாக புகலிடக் கோரிக்கைகளை அங்கீகரிப்பதில்லை என்றும் அது குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.