காலிமுகத்திடல் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தவர்கள் மீது படையினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை தாம் வன்மையாக கண்டிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

படையினர் நேற்று இரவு காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட களத்தை ஆக்கிரமத்தமை தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்க்பட்டுள்ளது.

மேலும், இன்றைய தினம் இலங்கைக்கு கறுப்பு தினமாகும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி பதவியேற்று முதல் நாளிலேயே சிவில் மக்களை அடக்குவதற்காக ஆயுதப்படையை பயன்படுத்துவது நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திர தன்மைக்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், படையினர் சிவில் மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்வது தொடர்பான வீடியோ ஆதரங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும், சட்டத்தரணிகள் மற்றும் ஊடகவியளாலர்கள் ஆகியோர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சட்டம் மற்றும் மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.