ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்கு அனுப்பவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ரணில் வீடு செல்ல வேண்டும் என்பதே மக்களின் தற்போதைய கோரிக்கை என தெரிவித்த அவர், எனவே மக்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என்றார்.
காலி முகத்திடலில் மக்களே போராடினர். இன்றும் மக்கள் தான் போராடி வருகின்றனர். ஆனால் அமைதியாக போராடும் மக்களை போராட்டக்காரர்கள் என தெரிவித்து, அவர்களை தாக்குவதற்கு இராணுவத்தினருக்கு புதிய ஜனாதிபதி உத்தரவிடுகின்றமை கீழ்த்தரமான செயற்பாடு என்றார்.
இதனால் அங்கு போராட்டத்தில் ஈடுபடும் மக்களின் கோபம் அதிகரிக்கும் என்று கூறினால் அது தவறாகாது.
எனவே புதிய ஜனாதிபதி வீட்டுக்குச் செல்ல வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அவ்வாறு மக்களின் கோரிக்கையை அவர் ஏற்காவிடின் ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி ராஜபக்ஸர்களைப் போலவே ரணிலையும் மக்கள் துரத்துவர் என்றார்.