நாட்டில் உள்ள எரிபொருள் நிலையங்களில் பாதியளவில் தற்போது தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின்படி எரிபொருள் விநியோகம் இடம்பெறுவதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று (27ஆம் திகதி) வரை 481 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இந்த முறையின் கீழ் எரிபொருளை விநியோகித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

409 சிபெட்கோ நிரப்பு நிலையங்கள் மற்றும் 72 ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தற்போது எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு அமைய எரிபொருளை விநியோகித்து வருகின்றன.

இதன்படி 158,208 வாகனங்களுக்கு எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக இதுவரை 4,296,950 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விநியோகிக்கும் திட்டம் அமுல்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.