ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் பத்தாவது பொதுச்சபைக் கூட்டம் 05.08.2022 வெள்ளிக்கிழமை மற்றும் 06.08.2022 சனிக்கிழமை ஆகிய இரு தினங்கள் யாழ்ப்பாணம் இணுவில் தனியார் விடுதியில் இடம்பெற்றது.

முதல் நாளின் ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு கட்சியின் ஸ்தாபகர் அமரர். க. உமாமகேஸ்வரன் அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து கட்சியின் ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் திரு. சு.ஜெகதீஸ்வரன் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

அதனை தொடர்ந்து கடந்த பொதுச்சபையின் செயற்பாட்டறிக்கையை இடைக்கால செயலாளர் நா.இரட்ணலிங்கம் வாசித்தளித்தார்.

கட்சியின் கணக்கறிக்கையினை பொருளாளர் க.சிவனேசன் வாசித்தார். இதனையடுத்து தலைவர் திரு. த.சித்தார்த்தன் அவர்கள் இன்றைய அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் கட்சியின் செயற்பாடுகள் குறித்தும் நாட்டில் இருக்கக்கூடிய அரசியல் சிக்கல் நிலைமைகள் பற்றியும் தெளிவுபடுத்தினார்.

இதனை தொடர்ந்து கட்சியின் முக்கியஸ்த்தர்கள், கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், அங்கத்தவர்கள் மற்றும் கட்சி அங்கத்தவர்களின் உரைகளும், ஜேர்மன் பிரதிநிதி திரு.ஜெகநாதன் , ஐக்கிய இராஜ்ஜிய பிரதிநிதிகள் திரு. சிவபாலன், திரு.பாலா, திரு முகுந்தன், திரு. நேதாஜி, திரு. சுகந்தன், திரு வேந்தன், அவுஸ்திரேலிய பிரதிநிதி திரு. பகுதி ஆகியோரின் உரைகளும் இடம்பெற்றன. தொடர்ந்து
கழகத்தினுடைய சுவிஸ் கிளையின் அறிக்கை வாசிக்கப்பட்டது.

இரண்டாம் நாளில் கட்சியின் உயர்பீடமும் புதிய மத்தியகுழுவும் தெரிவு செய்யப்பட்டது.

இதன்போது கட்சியின் தலைவராக திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் செயலாளராக திரு.நா. இரட்ணலிங்கம் அவர்களும், சிரேஷ்ட துணைத் தலைவராக திரு ராகவன் அவர்களும், துணைத் தலைவராக திரு கேசவன் அவர்களும், பொருளாளராக திரு.க.சிவநேசன் அவர்களும், தேசிய அமைப்பாளராக திரு பீற்றர் அவர்களும், நிர்வாக பொறுப்பாளராக திரு பற்றிக் அவர்களும் மேலும் 22 மத்திய குழு உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டார்கள்.

கட்சியின் ஆரம்பகால உறுப்பினரான திரு. கிருஷ்ணன் அவர்கள் வெளிநாட்டுக் கிளைகளின் ஆலோசராக மத்திய குழுவால் நியமிக்கப்பட்டார்.

கட்சித் தலைவரின் நன்றியுரையுடன் இரண்டுநாள் பொதுச்சபைக் கூட்டம் நிறைவுபெற்றது.

கூட்டத்தில் வடக்கு கிழக்கின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கட்சியின் உறுப்பினர்களும், வெளிநாட்டில் இருந்து பல பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள்.