தேர்தல் மற்றும் தேர்தல்களின் கட்டமைப்பில் திருத்தங்களை முன்மொழிய பாராளுமன்ற சிறப்புக் குழு அளித்துள்ள பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை அமுல்படுத்த அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுவான உடன்பாட்டுக்கு வந்துள்ளன.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (09) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள முதல் தேர்தலுக்கான வாக்கெடுப்புக்கு முன்னர் அதன் பரிந்துரைகளை ஏற்று நடைமுறைப்படுத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

அவற்றில், தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்துதல், முன்கூட்டியே வாக்களிக்கும் வாய்ப்புகளை வழங்குதல் மற்றும் வாக்கெடுப்பு நாளில் விசேட வாக்கெடுப்பு நிலையங்களை அமைத்தல், மக்கள் பிரதிநிதித்துவ அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

தேர்தல் காலத்தில் அனைத்து ஊடகங்களுக்கும் ஊடக உப-நடவடிக்கைகளை அமுல்படுத்துவது அந்த பரிந்துரைகளில் ஒன்றாகும்.

மக்கள் பிரதிநிதித்துவ அமைப்புகளின் உறுப்பினர்களின் பதவிக் காலம் முடியும் வரை தேர்தல் ஆணைக் குழு வெளியிடும் நெறிமுறைகள் செல்லுபடியாகும் என்றும் அதற்கு சட்டப்பூர்வ அதிகாரம் வழங்குவதும் அதில் அடங்கும்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)