முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் தற்காலிகமாக தங்குவதற்காக கோரிக்கை விடுத்துள்ளதாக தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதியிடம் உள்ள இராஜதந்திர கடவுச்சீட்டு மூலம் அவருக்கு 90 நாட்களுக்கு நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கலாம் எனவும் அவர் எப்போது நாட்டிற்கு வருவார் என அறிவிக்கப்படவில்லை எனவும் தாய்லாந்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் Tanee Sangrat தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி தாய்லாந்திற்குள் நுழைவது தற்காலிகமாக தங்குவதற்கு மாத்திரமே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தில் அரசியல் தஞ்சம் அடையும் எண்ணம் முன்னாள் ஜனாதிபதிக்கு இல்லை எனவும், அவர் தாய்லாந்தில் இருந்து வேறு ஒரு நாட்டிற்கு செல்வார் எனவும் இலங்கை தரப்பில் இருந்து தகவல்கள் தெரிவித்ததாகவும் Tanee Sangrat தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏழு தசாப்தங்களுக்கு பின்னர் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக கோட்டாபய ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக கடும் போராட்டங்கள் வெடித்ததுடன் கடந்த ஜூலை 9 ஆம் திகதி போராட்டகாரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டனர். முன்னாள் ஜனாதிபதி இதனையடுத்து இரண்டு நாட்களில் கோட்டாபய ராஜபக்ச மாலைதீவு சென்றதுடன் அங்கிருந்து ஜூலை 14 ஆம் திகதி சிங்கப்பூர் சென்றார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.