இலங்கையில் வாழ்கின்ற அநாதை, ஆதரவற்ற, கைவிடப்பட்ட, துஷ்பிரயோகத்திற்கு ஆளாகிய மற்றும் சட்டப் பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்துள்ள பிள்ளைகளின் பராமரிப்பு, பாதுகாப்பு, உடல் மற்றும் உள ரீதியான நல்விருத்தி போன்றவற்றை உறுதிப்படுத்துவதற்காக, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் சிறுவர் அபிவிருத்திச் சேவைகள் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள வழிகாட்டிகள் மற்றும் முதன்மைச் சட்டங்கள் மாகாண மட்டத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தாலும், தேசிய மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிகாட்டியொன்று இல்லை.

அதனால், சிறுவர் பாதுகாப்பு தொடர்பான துறைசார்ந்த அனைத்துத் தரப்பினர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி குறித்த நிபுணர்களின் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டலின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த ´இலங்கையில் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கான தேசிய வழிகாட்டி மற்றும் குறைந்தபட்ச தரநியமங்கள்´ இற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.