அதிநவீன தொழில்நுட்ப கப்பல் தொடர்பில் இலங்கை எடுத்த தீர்மானத்தை, கடும் அழுத்தங்களைக் கொடுத்து சீனா மாற்றியுள்ளதாக Hindustan Times இன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் சீனா இலங்கைக்கு அதிக அழுத்தங்களை கொடுத்ததாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது கப்பலின் கடல்சார் ஆராய்ச்சி நடவடிக்கைகள் சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைகளுக்கு ஏற்பவே அமைந்துள்ளதாக சீனா சுட்டிக்காட்டியுள்ளது.

Yuan Wang 5 கப்பல் நேற்று காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்ததுடன், தொடர்ந்தும் அங்கு நங்கூரமிட்டுள்ளது.

வௌிவிவகார அமைச்சு வழங்கிய அனுமதியின் பிரகாரம், 7 நாட்கள் குறித்த கப்பல் துறைமுகத்தில் தங்கியிருக்க முடியும்.

இதேவேளை,  சீன இராணுவத்தால் Yuan Wang 5 கப்பலுக்கு கட்டளை பிறப்பிக்கப்படுவதால், அது குறித்து கவனம் செலுத்துவதாக இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கைக்கு தெரிவித்துள்ளதாக இந்தியாவின் Hindustan Times பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய கடற்படை தற்போது சீன கப்பலின் இருப்பிடம் மற்றும் கூடுதல் செயற்பாடுகளை மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக கடற்படையின் பெயர் குறிப்பிடப்படாத அதிகாரி ஒருவர் கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பல நாடுகள் பிராந்தியத்தில் முக்கியத்துவம் பெறுவதற்காக, இந்து சமுத்திரத்தில் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு, தமது செல்வாக்கை விரிவுபடுத்த முயற்சிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தாய்லாந்து விஜயத்தின் போது குறிப்பிட்டுள்ளார்.

இந்து சமுத்திரமானது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே மற்றுமொரு சர்ச்சைக்குரிய இடமாக மாறாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா தமது தேசிய பாதுகாப்பு தொடர்பில் கவனத்திற்கொள்ள வேண்டும் என்ற போதிலும், வலயத்தில் விசேட சலுகைகளைக் கோர முடியாது எனவும் எஸ்.ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அயல்நாடு என்ற வகையில் கலாசார, பொருளாதார ரீதியில் ஒருவருக்கொருவர் பிணைந்துள்ளதாக அவர் நினைவுபடுத்தியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியின் போது, சர்வதேச நாணய நிதியத்துடன் செயற்பட்டு முன்னோக்கிச் செல்ல இலங்கைக்கு உதவி புரிந்த முதலாவது நாடு இந்தியா என்பதனையும் இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நினைவுகூர்ந்துள்ளார்.

Yuan Wang 5 கப்பல் மேற்கொள்ளும் சமுத்திர ஆய்வு நடவடிக்கைகள் எந்தவொரு நாட்டினதும், மூன்றாம் தரப்பின் பாதுகாப்பு அல்லது பொருளாதாரத்திற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என சீன வௌிவிவகார அமைச்சின் பேச்சாளர் வேன் வென்பிங் நேற்று தெரிவித்திருந்தார்.

இதேவேளை ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் சீன கப்பல் Yuan Wang 5 நங்கூரமிட்டுள்ள நிலையில், இந்தியாவின் இராமேஸ்வரம் கடலில் இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம்  தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் இராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல் பகுதியில் தாழ்வாக பறந்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

மண்டபம் பகுதியில் இந்திய கடலோர காவல் படைகள் முகாம்கள் அமைத்து  இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்நிய ஊடுருவலை கண்காணிப்பதற்காகவே சர்வதேச கடல் எல்லையில்  ஹெலிகாப்டர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக  பாதுகாப்பு உயர் அதிகாரி குறிப்பிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

மேலும் இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சீன தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல் ஒன்று இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ளதால், இந்திய கடற்படை கண்காணிப்பை அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.