2009 ஆம் ஆண்டு  உள்நாட்டு யுத்தத்தின் போதான வலிகள், தாக்கங்கள் தொடர்பில் புலம்பெயர் தமிழர்களுடன் பிரித்தானிய பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் (Rishi Sunak) கலந்துரையாடியுள்ளதாக Tamil Guardian தெரிவித்துள்ளது.

தமிழர்களின் நீதிக்கான போராட்டத்திலும்  இறுதி யுத்தத்தின் போதும் தமிழர்கள் எதிர்நோக்கிய நெருக்கடிகளுக்கும், அவை குறித்த பொறுப்புக்கூறல் தொடர்பிலும் ரிஷி  சுனக் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன்னதாக  பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமை வேட்பாளர்  ரிஷி சுனக், தமிழ் தரப்பினரை சந்தித்துள்ளதுடன், பிரித்தானியாவில்  தமிழர்களின் பங்களிப்பிற்காகவும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் இருந்து  விலகியமை காரணமாக, இலங்கை மீது கடுமையான நிலைப்பாட்டை பிரயோகிப்பதில் சர்வதேச சமூகத்தின் உறுப்பினர்களுக்கு தனது ஆதரவை வழங்குவதாகவும் ரிஷி சுனக் தெரிவித்துள்ளதாக Tamil Guardian செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பிலான ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு தனது ஆதரவை வழங்கியுள்ள ரிஷி  சுனக், எதிர்கால தீர்ப்பாயத்தில் பயன்படுத்தக்கூடிய போர்க்குற்ற சான்றுகளை சேகரிப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, ரஷ்யர்கள் மீது இங்கிலாந்து விதித்துள்ள தடைகளைப் போன்று, இலங்கை அதிகாரிகள் மீது தடை விதிப்பதற்கான  சாத்தியம் தொடர்பிலும், பிரித்தானியவாழ் தமிழர் பிரதிநிதிகளுடன் ரிஷி  சுனக் கலந்துரையாடியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பிலும் ரிஷி  சுனக் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடி, எல்லையில்லா பணவீக்கம் , அடிப்படைத் தேவைகளின் பற்றாக்குறை தொடர்பிலும் அவர் கவனம் செலுத்தியுள்ளார்.