நெருக்கடி நிலைமைகளில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் பொதுவான வேலைத்திட்டங்களில் தாம் அரசாங்கத்துக்கு  முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவோம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

அனாவசியமான  கைதுகள், தாக்குதல்கள் மற்றும் அடக்குமுறைகளை இந்த அரசாங்கமும் அளவுக்கு அதிகமாக கையாள்கின்றது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்,எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவை நேற்று (19)  சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைகள் குறித்தும், அரசியல் நிலைமைகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டிருந்ததுடன், சர்வதேச ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ளும் ஒன்றிணைந்த செயற்பாடுகள் குறித்தும் இதன்போது பேசப்பட்டிருந்தது.

சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ளவும், சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட ஏனைய நிதி உதவிசார் அமைப்புகளின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ளவும் எதிர்க்கட்சியின் முழுமையான ஆதரவை வழங்க  தயாராக இருப்பதாகவும், பாராளுமன்ற கட்டமைப்பின் கீழ் சகல காட்சிகளையும் ஒன்றிணைந்து, பாராளுமன்ற குழுக்களின் மூலமாக அரசாங்கத்திற்கு ஒத்துழைப்புக்களை வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அனாவசியமான  கைதுகள், தாக்குதல்கள் மற்றும் அடக்குமுறைகளை இந்த அரசாங்கமும் அளவுக்கு அதிகமாக கையாள்கின்றது. இது ஆரோக்கியமான நகர்வல்ல. எதிர்க்கட்சியாக இதனை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதும் இல்லை என்பதையும் எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமை மீறல்கள், ஜனநாயகத்திற்கு எதிரான அடக்குமுறைகளை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதை வலியுறுத்தியுள்ள தூதுவர், இலங்கை மக்களின் அவசர மற்றும் நீண்ட கால தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு இலங்கையின் அனைத்து துறைகளும் எவ்வாறு ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம் என்பதையும் தெரிவித்துள்ளார்.