இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் புதன்கிழமை (24) கொழும்பு திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஜூலை 9ஆம் திகதியன்று நடத்தப்பட்ட மக்கள் எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து நாட்டை விட்டு தப்பிச்சென்ற அவர், தனது ஜனாதிபதி பதவியையும் இராஜினாமாச் செய்திருந்தார்.

இலங்கையில் இருந்து மாலைதீவுக்கு சென்ற அவர், அங்கிருந்து சிங்கப்பூர் சென்றிருந்த நிலையில், தற்போது தாய்லாந்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

மனிதாபிமான அடிப்படையில் தற்காலிகமாக தங்க மட்டுமே கோட்டாபயவுக்கு அனுமதி வழங்ப்பட்டுள்ளதாகவும் நிரந்தரமாக தங்க முடியாது என்றும் தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் அவருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு கருதி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாவின் மனைவி அனோமா ராஜபக்ஷவுக்கு அமெரிக்க குடியுரிமை உள்ளதால், கணவர் என்ற வகையில் கோட்டா மீண்டும் அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கு தகுதி உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான நடைமுறைகளை அமெரிக்காவில் உள்ள அவரது சட்ட நிபுணர்கள் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த 2003ஆம் ஆண்டில் அமெரிக்க குடியுரிமை பெற்ற கோட்டா, 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான பெங்கிரிவத்தை வீட்டுக்கும் அதனைச் சூழவுள்ள பகுதியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்குமாறு பொலிஸ் மா அதிபரால் உத்தரவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.