அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (சிபெட்கோ) தொழிற்சங்கங்கள், நாளை (22) எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

கூட்டுத்தாபனத்தில் மேற்கொள்ளப்படவுள்ள உத்தேச மறுசீரமைப்பு திட்டங்களுக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை சவால் செய்யப்படவில்லை என்றாலும் பெற்றோலியம் மற்றும் மின்சாரம் ஆகிய இரண்டு துறைகளும் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் அதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்காக அமைச்சர் அண்மையில் ஏழு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெற்றோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் விற்பனை  செய்வதற்கும் பொருத்தமான நிறுவனங்களை மதிப்பிடுவதற்கு இந்தக் குழு பணிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இலங்கையில் சிபெட்கோ மற்றும் ஐஓசியுடன் பல நிறுவனங்கள் பெற்றோலியத் தொழிலில் ஈடுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.