முல்லைத்தீவு – வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைந்த பகுதியிலுள்ள தமிழ் மக்களின் 617 ஏக்கர் காணிகளை அளவீடுசெய்து, கடற்படையினர் அபகரிக்க எடுத்த முயற்சி, காணி உரிமையாளர்களாலும் மக்கள் பிரதிநிதிகளாலும் இன்று (23) மீண்டும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக வட்டுவாகல் கோட்டாபய கடற்படைத் தளத்தினை அகற்றுமாறும், அங்குள்ள தமது காணிகளை விடுவிக்குமாறும் காணிஉரிமையாளர்களான தமிழ் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட காலத்திலிருந்து தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருந்தனர்.

அத்தோடு, கடற்படையினர் குறித்த காணிகளை அளவீடுசெய்து அபகரிக்க எடுத்த முயற்ச்சிக்கும் எதிர்ப்புத் தெரிவித்து பலதடவைகள் காணி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் இறுதியாக நில அளவீட்டுக்கு எதிராக காணி உரிமையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது, ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகைதந்த முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், இக்காணிப்பிணக்குத் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் மாவட்ட செயலரின் தலைமையில் கலந்துரையாடல் ஒன்றினை நடாத்துவதாக உறுதியளித்திருந்தார்.

அக்கலந்துரையாடலுக்கு காணி உரிமையாளர்கள், மக்கள்பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட திணைக்களத்தினர், கடற்படையினர் அழைக்கப்பட்டு கலந்துரையாடி முடிவெடுக்கப்படும் என்ற உறுதிமொழியும் வழங்கியிருந்தார்.

அதன்படி, முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் இக் காணிப்பிணக்குத் தொடர்பாக ஓர் கலந்துரையாடல் 23.06.2022அன்று  ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

இக்கலந்துரையாடலில் மேலுதிக மாவட்டசெயலர், கரைதுறைப்பற்று பிரதேசசெயலர், சிரேஸ்டநிலஅளவை அத்தியட்சகர், அரச நிலஅளவையாளர், முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம அலவலர், பிரதேசசெயலக காணிவெளிக்கள உத்தியோகத்தர்கள், காணிக்கு உரிமைகோருபவர்கள் கலந்துகொண்டனர். இக்கலந்துரையாடலின் முடிவில் காணியை அளவீடுசெய்வதென முடிவெடுக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில், இன்றையதினம் (23) அளவீடுசெய்வதற்காக நில அளவைத் திணைக்களத்தினர் வருகைதந்தபோது நில அளவைத் திணைக்கள வாகனத்தினை கோட்டாபாய கடற்படை முகாம் வாயிலில் வைத்து காணி உரிமையாளர்களும், மக்கள் பிரதிநிதிகளும் வழிமறித்து, நிலஅளவீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

குறிப்பாக 23.06.2022அன்று மாவட்டசெயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு மக்கள் பிரதிநிதிகள் அழைக்கப்படாமைதொடர்பிலும் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது.

அத்தோடு குறித்த கலந்துரையாடலில் காணிஉரிமையாளர்கள் பெரும்பாலானோர் காணி அளவீட்டிற்கு சம்மதம் தெரிவிக்காத நிலையிலும் காணியினை அளவிட கலந்துரையாடலின் முடிவில் முடிவெடுக்கப்பட்டதாகவும், அக்கலந்துரையாடலுக்கு காணி உரிமையாளர்களைவிடவும் அதிகமான அளவில் புலனாய்வாளர்கள் வருகைதந்திருந்ததாகவும் காணி உரிமையாளர்களால் குற்றஞ்சாட்டப்பட்டது.

அத்தோடு காணிஅளவிட ஒத்துழைக்குமாறு புலனாய்வாளர்கள் காணிஉரிமையாளர்கள் பலரதும் வீட்டிற்குச் சென்று அச்சுறுத்தியதாகவும் காணி உரிமையாளர்களால் குற்றஞ்சாட்டப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பிறிதொருநாளில் மாவட்டசெயலகத்தில், மாவட்ட செயலர் தலைமையில் இக்காணிப்பிணக்குத் தொடர்பில் மீண்டும் கலந்துரையாடல் ஒன்றினை ஒழுங்குசெய்யுமாறு காணி உரிமையாளர்களால் தெரிவிக்கப்பட்டதுடன், அக் கலந்துரையாடலுக்கு மக்கள் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் மீண்டுமொரு கலந்துரையாடலை நடாத்தி காணி அளவிடுவது தொடர்பில் ஆராயுமாறு வலியுறுத்தி காணி உரிமையாளர்களின் கையொப்பத்துடன் நில அளவையாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

மேலும் இவ்வார்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான கந்தையா சிவநேசன், துரைராசா ரவிகரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.