வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் இராமச்சந்திரன் சுரேன் தெரிவாகியுள்ளார். வல்வெட்டித்துறை நகர சபைக்கான தவிசாளர் தெரிவு, நகர சபை மண்டபத்தில் இன்று (23) இடம்பெற்றது.

இதன்போது தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினருக்கு ஆதரவாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் இருவர், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் ஒருவர், சுயேட்சை குழுவை சேர்ந்த நால்வர் மற்றும் விடுதலைக்கூட்டணி உறுப்பினர் ஒருவர் ஆகிய 8 வாக்குகள் அளிக்கப்பட்டன.

இவருடன் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் க.சதீஸ்க்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆறு பேரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் இருவருமாக 08 வாக்குகள் அளிக்கப்பட்டன.

அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் சபைக்கு சமூகமளிக்கவில்லை.

அந்நிலையில் தவிசாளர் பதவிக்கு போட்டியிட்ட இருவரும் 08 வாக்குகளை பெற்று சமநிலையாக காணப்பட்டமையால், திருவருள் சீட்டு மூலம் தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர் இ.சுரேன் தவிசாளராகத் தெரிவானார்.