சீனாவின் Yuan Wang 5 ஆய்வுக் கப்பலின் நடவடிக்கைகள் தொடர்பில் மீண்டும் சர்வதேசம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. சர்ச்சைக்குரிய சீனாவின் Yuan Wang 5 அதிதொழில்நுட்ப கண்காணிப்பு ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு தெற்கே இந்து சமுத்திரத்தை ஆய்வு செய்து வருவதாக The Hindu செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 22 ஆம் திகதி ஹம்பந்தோட்டை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற குறித்த கப்பல்,  சீனாவிலுள்ள ஜியாங்யின் துறைமுகத்திற்கு நேரடியாக செல்வதாக அறிவிக்கப்பட்டது.

எனினும், ஹம்பந்தோட்டையில் இருந்து புறப்பட்ட கப்பல் தற்போது இலங்கைக்கு தெற்கே இந்து சமுத்திரத்தில் ஆய்வு செய்து வருவதாக The Hindu செய்தியில்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் தென் பகுதியில் இருந்து சுமார் 400 கடல் மைல் தொலைவில் சீன கப்பல் நிலைகொண்டு, ஆய்வில் ஈடுபடுவது தெரியவந்துள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன கப்பல், ஜியாங்யின் துறைமுகத்திற்கு செல்லுமா அல்லது வேறு நாட்டின் துறைமுகத்திற்கு செல்லுமா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என The Hindu செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீன கப்பல் நங்கூரமிட்ட சம்பவம் தொடர்பில், இந்தியா – இலங்கைக்கு இடையில் பிரச்சினையொன்று ஏற்பட்தாக எவ்வித விவாதமும் இடம்பெறவில்லை என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகளை தவிர்ப்பதற்கும் இவ்வாறான பிரச்சினைகளின் ஊடாக இருதரப்பு நம்பிக்கை சீர்குலையும் செயற்பாடுகளுக்கு இடமளிக்காமல் இருப்பதற்குமான திட்டம் தம்மிடம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

The Hindu பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவற்றை தெரிவித்துள்ளார்.

செய்மதிகள் மற்றும் ஏவுகணைகளை கண்காணிக்கும் திறன் கொண்ட Yuan Wang 5 என்ற சீன கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற சில நாட்களுக்கு பின்னர் இலங்கை உயர்ஸ்தானிகர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த சர்ச்சை குறித்து இந்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

மிலிந்த மொரகொடவின் கருத்திற்கு அமைவாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சியை விட்டு விலகி ரணில் விக்கிரமசிங்க பதவிக்கு வந்த பின்னர் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த சீன கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த பின்புலத்தில் இதற்கான போதிய கவனம் செலுத்தப்படவில்லை என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட The Hindu பத்திரிகைக்கு கூறியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை இந்தியாவிற்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாத வகையில், பல்வேறு வகையான 10 ஆராய்ச்சிக் கப்பல்கள் நங்கூரமிடப்பட்டுள்ளதால், இந்த கப்பலின் வருகைக்கும் அதே கொள்கை பின்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விசேட சந்தர்ப்பத்தில், கப்பல் வகைகள் அல்லது தொழில்நுட்ப முறைகளுக்கு இடையிலான வேறுபாட்டைக் கண்டறிவதில் நாட்டில் குழப்ப நிலை ஏற்பட்டிருக்கலாம் என மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

துரதிர்ஷ்டவசமாக, அனுமதி கிடைத்தவுடன் அதனை திரும்பப் பெறுவது கடினம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக பொருளாதார மற்றும் மூலோபாய துறைகளில் இந்திய – இலங்கை ஒத்துழைப்பு தொடர்பான உறவுகளின் எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவிடமிருந்து கடன் வசதிகள் உள்ளிட்ட 3.8 பில்லியன் டொலர் பெறுமதியான பொருளாதார உதவிக்கு மேலதிகமாக இந்தியா மற்றும் கொழும்பிற்கு இடையிலான வர்த்தக உறவு, வலுசக்தி பகிர்விற்கான வலையமைப்பு, புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் எண்ணெய் சேமிப்பு உட்கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பில் இரு தரப்பிற்கு இடையிலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.

இதனைத் தவிர, சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைக்கு இந்தியாவும் இலங்கைக்கான ஆதரவை வழங்கி வருவதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட குறிப்பிட்டுள்ளார்.