பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, ஆண்டு தோறும் கணிசமான பணத்தை சேமிக்க தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, வெளிநாட்டு விடுமுறைக்கு விண்ணப்பிப்பதற்கு அரச அதிகாரிகள் பயன்படுத்தும் ஏ4 அளவை விட பெரிய 4 பக்க விண்ணப்ப படிவத்தை ஏ4 தாளில் 2 பக்கங்களாக குறைப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது.

அரச சேவையில் அமுல்படுத்தப்படும் சிக்கனக் கொள்கையின் அடிப்படையில் விடயதான அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் ஆலோசனைக்கு அமைய இந்த விடயம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னே தெரிவித்தார்.

குறித்த விண்ணப்பப் படிவத்துக்கான காகித செலவில் சுமார் 50 சதவீதம் சேமிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

ஆண்டுதோறும் வெளிநாடு செல்ல விண்ணப்பிக்கும் அரச ஊழியர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக இருப்பதால், காகிதம் மற்றும் பணத்தை அரசாங்கத்தால் சேமிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

ஏற்கெனவே இருந்த விணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்ட அனைத்து விடயங்களும் புதிய படிவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் விண்ணப்பங்களை அச்சடிப்பதற்கு அரச அச்சகத் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.