இன்று 74 வது அகவை பூர்த்தியாகும் எமது கட்சி எனும் குடும்பத்தின் மூத்தவர், தலைவர் த. சித்தார்த்தன் அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் நலம் பெற்று வாழ வேண்டும், தமிழினத்தின் விடுதலைக்காக பணிபுரிய வேண்டும் என வாழ்த்தி நிற்கிறோம்.

எளிமை, அடக்கம், யதார்த்தம் என்பவற்றிற்கு இலக்கணமாய் விளங்கும் எமது அரசியல் ஆசான், இன்றுவரை எம்மையும் எமது ஆதரவாளர்களையும் எம் சமூகத்தையும் நெறிப்படுத்தியதைப் போலவே இனிவரும் காலங்களிலும் வழிப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

தமிழினத்தின் பேச்சாளராக நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு திம்புவில் ஆரம்பித்த வரலாற்றுக் கடமை இன்னும் அவர் தோள்களில் சுமத்தப்பட்டிருப்பதாகவே நாம் உணர்கிறோம். கூடவே, தமிழர்களின் ஒற்றுமையை கட்டமைத்து உறுதிப்படுத்தும் கடமையும் அவர் கரங்களில் காலத்தால் கையளிக்கப்பட்டிருக்கின்றது.

பேராளர்களினதும் ஆதரவாளர்களினதும் எழுச்சியுடன் காணப்பட்ட நிறைந்த சபைகளில், அவரிடம் முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் அதனை சான்று பகிர்கின்றன. கட்சி, வயது பேதமின்றி தமிழினத்தின் மூத்த தலைவர்கள் கூட அவரால் மேற்கொள்ளக்கூடிய வரலாற்றுப் பணியையும், அதற்கான அவரின் தகைமைகளையும் கோடிட்டுக் காட்டியுள்ளனர்.

பதவிக்கும் அதிகாரத்திற்கு விளம்பரத்திற்கும் ஆசை கொள்ளாத அவரது உயர்பண்புகள், தமிழர் தரப்பை ஒன்றிணைக்கும் அவசியக் கடமையை அவரிடம் கொண்டுவந்து சேர்த்துள்ளது. அதனை அவர் தனது எதிர்கால வேலைத்திட்டத்தின் முதன்மையான பணியாகக் கொண்டு நிறைவேற்ற வேண்டும் என்று இன்றைய நன்னாளில் அவரிடம் நாங்கள் எதிர்பார்த்து நிற்கிறோம்.

என்றும் போல, அவரது தலைமைத்துவத்திற்கும் கடமைகளுக்கும் வலுச்சேர்க்கும் வகையில் உறுதுணையாக நாம் நிற்போம். காலம் அவருக்கு வழங்கியுள்ள பணியை நிறைவேற்றி எமது இனம் காணும் நெருக்கடிகளை நீக்க இணையாய் நின்று உழைப்போம். தமிழினத்திற்காக அவர் முன்னெடுக்கும் அனைத்து செயற்பாடுகளிலும் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

ஊடகப் பிரிவு
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)