தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வை எட்டுவதற்கான அர்ப்பணிப்பில் இலங்கை அரசாங்கத்தினால் அளவிடக்கூடிய முன்னேற்றம் எதுவும் ஏற்படாமை குறித்து இந்தியா, இன்று (12) ஜெனீவாவில் கவலை தெரிவித்தது.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவும், மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கவும், மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்தவும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கான இந்தியாவின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய இலங்கையின் கட்டமைப்பிற்குள் அரசியல் தீர்வை ஏற்படுத்தி, அங்கு வாழும் தமிழர்களுக்கு நீதி, சமாதானம், சமத்துவம் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வது தமது நிலையான பார்வை என்றும் மனித உரிமைகள் பேரவையில் இந்தியா தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியானது கடனினால் இயங்கும் பொருளாதாரத்தின் வரம்புகளையும் அது வாழ்க்கைத் தரத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் நிரூபித்துள்ளதாக இந்திய பிரதிநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.