இன்று காலை 11.30 மணிக்கு திருகோணமலையில் அமைந்துள்ள திருக்கோணஸ்வர ஆலய பரிபாலன சபைக் காரியாலயத்தில் ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு. தி. துஷ்யந்தன், புளொட் அமைப்பின் தேசிய அமைப்பாளர் ஆ.ஸ்ரீஸ்கந்தராஜா (பீற்றர்) ஆகியோர்க்கிடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது.

தற்பொழுது ஆலயம் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளான, தொல்பொருள் தினைக்களத்தினால் ஆராய்ச்சி என்ற பெயரில் பேரினவாதச் சிந்தனையுடன் செயல்படுகின்றமை, கோயில் நடைபாதையில் கடந்த காலங்களில் அத்துமீறி அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றி பொருத்தமான இடத்தில் அமைப்பது, கலை கலாச்சார சமய பண்பாடுகளுக்கு அமைவாக இவ் ஆலயத்தின் கீர்த்தியை மேலும் மேன்புறச் செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

மேலும், தமிழ் அரசியல் தலைவர்கள் ஒன்றாக இணைந்து தலத்துக்கு வருகை தந்து பிரச்சினைகளை ஆராய்ந்து கொழும்புக்கு அழுத்தங்களை வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள சைவ மக்களிடமும் சைவ மத அமைப்புகளிடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் எனவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.