ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பிலான புதிய பிரேரணை வரைபு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜெர்மனி, மசிடோனியா மற்றும் மலாவி ஆகிய நாடுகளின் இணை அனுசரணையில் இந்த பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், உணவு பாதுகாப்பற்ற தன்மை, எரிபொருள் பற்றாக்குறை, அத்தியாவசிய மருந்து தட்டுப்பாடு, வீட்டு பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக வறுமையில் வாடும் மக்கள், நாளாந்த சம்பளம் பெறுவோர், சிறு பிள்ளைகள், வயோதிபர்கள் மற்றும் உபாதைக்குள்ளானோர் எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள் தொடர்பில் புதிய வரைபு பிரேரணையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஏப்ரல் மாத்தில் இருந்து இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், அறவழி போராட்டக்கார்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள், அவர்கள் கைது செய்யப்பட்டமை, அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவோர் தொடர்பில் ஏற்பட்ட வன்முறைகள், கொலை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இராணுவமயமாக்கல், நீதி மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக செயற்படுகின்ற அமைப்புகளின் சுயாதீனத்தன்மைக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றமை, மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளில் முன்னேற்றம் காணப்படாமை, சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கு செவிசாய்க்காமை, ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்கள் அச்சுறுத்தப்படுகின்றமை, பின்தொடரப்படுகின்றமை, துன்புறுத்தப்படுகின்றமை மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றமை தொடர்பிலான விடயங்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என இணை அனுசரணை நாடுகள் வலியுறுத்தியுள்ளன.