அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆக வரையறுப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை அமல்படுத்தும் சுற்றறிக்கை, பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சினால், இன்று (14) வௌியிடப்பட்டது.
2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் அனைத்து அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லை 60 ஆக கருதப்படும் என்று அமைச்சரின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே வெளியிட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் மூலமும் நீதித்துறை சட்டத்தின் மூலமும் நிர்ணயிக்கப்பட்டுள்ள நீதிச் சேவை உத்தியோகத்தர்களைத் தவிர, அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் இது ஏற்புடையதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
60 வயதுக்கு மேல் தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள மற்றும் 2022.12.31 திகதி அல்லது அதற்கு முன்னர் 60 வயது பூர்த்தியாகும் ஊழியர்களுக்கு அவர்களின் விருப்பப்படி டிசெம்பர் 31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் ஓய்வு பெற வாய்ப்பளிக்கப்படும் என்று சுற்றிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு ஓய்வுபெறவுள்ள ஊழியர்கள் உரிய நடைமுறைப்படி தங்களது ஓய்வு விண்ணப்பங்களை அதிகாரியின் ஒப்புதலுடன் ஓய்வூதிய பணிப்பாளர் நாயகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.