2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதிவாதிகள் அறுவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில், இன்று (15) அதிகுற்றப்பத்திரம் பகிரப்பட்டது.
கொழும்பு சினமன் கிராண்ட் மற்றும் ஷங்ரில்லா ஆகிய சொகுசு ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய மொஹமட் இல்ஹாம் மற்றும் மொஹமட் இன்ஸாப் ஆகியோருடன் தொடர்பு வைத்திருந்த பிரதிவாதிகள் அறுவருக்கே குற்றப்பத்திரம் பகிரப்பட்டது.
சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட அதிகுற்றப்பத்திரம், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில், பகிரப்பட்டது.
2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று, கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பில் சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்புடைய உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாத்தைச் சேர்ந்த ஒன்பது தற்கொலை குண்டுதாரிகள், இலங்கையின் கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து 2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத்தன்று நடத்திய தொடர் குண்டுவெடிப்பில் 270 பேர் கொல்லப்பட்டதுடன், 500 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.