இலங்கையில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், நாட்டில் தற்போது அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுடன் ஒத்துப்போவதில்லை. இந்தநிலையில் வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்லும் இலங்கையர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமகால அடிமைத்தனம் பற்றிய ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் டொமோயா ஒபோகாடா முன்வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையில் நன்மைகள் இலங்கையில் தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ள சமகால அடிமைத்தனம் பற்றிய ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர், இலங்கைத் தொழிலாளர்களின், குறிப்பாக தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள் குறித்துஅறிக்கையிட்டுள்ளார்.
தேயிலைத் தோட்டங்களில் தேயிலை கொழுந்து பறிக்கும் பெண்கள், ஆண்களை விட இரண்டு மடங்கு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்ற போதும், ஆண்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கு நிகராகவே பெண்களும் சம்பளம் பெறுகின்றனர். அத்துடன் ஆடைத் தொழில் மற்றும் வீட்டு வேலைகளில் இதே பாகுபாடு நீடிப்பதாக விசேட அறிக்கையாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் தொழிலாளர்கள் மத்தியில் உள்ள முக்கிய பிரச்சினை பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறையாகும். எனினும் பழிவாங்கப்படலாம் என்ற பயம் காரணமாக முறைப்பாடுகள் செய்யப்படுவதில்லை விடயத்தையும் அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.