ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இனது 34 வது ஆண்டு நிறைவு நாளையொட்டி இவ் ஆக்கம் பிரசுரிக்கப்படுகிறத

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) இன் அரசியல் பிரிவை, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி எனும் பெயரில் ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்து இன்றுடன் முப்பத்தி நான்கு (34) ஆண்டுகள் நிறைவடைகின்றன.

1987 இல் உருவாக்கப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் மற்றும் பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஆகியவை, பிரதான போராட்ட அமைப்புகளின் பங்களிப்போ, ஆதரவோ இல்லாமலே தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் செல்திசையை முழுமையாக அன்று மாற்றியமைத்திருந்தன.

போராட்ட அமைப்புகளிடையே சகோதரப் படுகொலைகள் மேலெழுந்து, பாசிசவாதம் முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்திக் கொண்டிருந்த ஓர் காலகட்டத்தில், தென்னிலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களையும் வாய்ப்புகளையும் பயன்படுத்த தந்திரோபாய நடைமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலைமை போராடிக் கொண்டிருந்த அனைத்து அமைப்புகளுக்கும் ஏற்பட்டிருந்தது.

ஆரம்ப காலம் முதலே எமது புளொட் அமைப்பு கொண்டிருந்த அரசியல் நிலைப்பாடு காரணமாக, செயலதிபர் அமரர் தோழர். க. உமாமகேஸ்வரன் அவர்களின் தொலைநோக்குடனான தீர்மானத்துடன், தென்னிலங்கை அரசியல் நடைமுறைகளில் எமது அமைப்பையும் சட்டபூர்வமாக இணைத்து இயங்குவது காலத்தின் தேவையாக அமைந்திருந்தது.

தவிர, தமிழ் மக்களினது போராட்டத்தை அடக்க மேற்கொள்ளப்பட்ட தாயக நில அபகரிப்பினையும் இராணுவமயமாக்கலையும் அரசாங்க நிகழ்ச்சி நிரலாக்கி சாதாரண சிங்கள மக்களின் அடிப்படை சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளை திசைதிருப்பி அதிகாரத்தை அனுபவித்துக் கொண்டிருந்த பௌத்த சிங்கள மேலாதிக்கவாதிகளின் ஆட்சியினை தோற்கடிக்கவும், தமிழ் மக்களின் சுயநிர்ணயக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டிருந்த சிங்கள, மலையக, முஸ்லீம் அரசியல் சக்திகளுடன் இணைந்து தேசிய இனப் பிரச்சினைக்கு நிரந்தமான ஒரு தீர்வைப் பெற்றுக் கொள்ளும் நோக்குடனும் கழகத்தின் அரசியல் பிரிவு தன்னை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி எனும் பெயரில் அரசியல் கட்சியாக பதிவு செய்து கொண்டது.

1990 களில், தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணவென முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஏற்பாடு செய்திருந்த சர்வகட்சி மகாநாடு முதல் இன்றுவரையிலும், போராட்டத்தின் அரசியல், இராணுவ ரீதியான மாற்றங்களை சூழ்நிலைக்கேற்ப உள்வாங்கி கழகத்தின் மூலோபாயத்திலிருந்து தடம் புரளாது ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்து வருகிறது.

போராட்ட அமைப்புகளிடையே ஏற்பட்ட சகோதரப் படுகொலைகளின் மூலகாரணமான பாசிசவாதத்திற்குப் பல நூற்றுக்கணக்கான தோழர்களையும் ஆதரவாளர்களையும் இழக்கும் நிலை ஏற்பட்ட பின்பும் கூடஇ தமிழ் மக்களின் விடுதலைக்கு அத்தியாவசியமான, தமிழ் அமைப்புகளிடையேயான ஒற்றுமைக் கட்டமைப்பை சிதைய விடாமலும் அதேநேரத்தில் அக் கட்டமைப்பை மேலும் வலுவானதாக்கவும், கட்சி நலன்களை மேவி பலதரப்பட்ட தரப்புகளுடன் சகிப்புத்தன்மையுடனும் விட்டுக்கொடுப்புடனும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி தொடர்ந்து
பணியாற்றி வருகின்றது.

1994 இல் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, ரெலோ மற்றும் ஈரோஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து வன்னியில் தமிழ்த் தேசியத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை நூறு வீதம் உறுதிப்படுத்திக் கொண்டதையும், வவுனியா மற்றும் கிழக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்களில் தமிழ்த் தேசியத்தின் பிரதிநிதித்துவத்தை காப்பாற்றிக் கொண்டதையும் எமது மக்கள் என்றும் மறந்துவிடமாட்டார்கள்.

உரிமைகளுக்கான போராட்டம், மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் அபிவிருத்தி ஆகிய இரண்டு விடயங்களையும் சமாந்தரமாக முன்கொண்டு செல்லும் நடைமுறையை, தமிழர்களின் அரசியல் பயணத்தில், அக்கால ஒற்றுமைக் கூட்டணி முதற்தடவையாக முன்னெடுத்ததோடு அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் கண்டிருந்தது. வவுனியா மாவட்டத்தின் தெற்கு எல்லைப்புற மக்கள் இன்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியை போஷிப்பதன் காரணம் அன்று நாம் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டமையே ஆகும்.

ஆனாலும், எமது கட்சியின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கும் அர்ப்பணிப்புக்கும் அப்பாற்பட்டு, ஒற்றுமையான கட்டமைப்பை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று வெளிப்படையாகவே முன்னெடுக்கப்படுவதை நாம் கவலையுடன் நோக்குகிறோம். அண்மைய சிலவருட காலமாக, ஒற்றுமைக் கூட்டணியான கூட்டமைப்பின் மூலோபாயங்கள் குறித்தும் செயற்பாடுகள் குறித்தும் எமது மக்கள் சந்தேகம் கொள்ளவும் அச்சம் தெரிவிக்கவும் தொடங்கியுள்ளனர். கூட்டமைப்பின் முடிவுகளை உரிமையுடன் கேள்விக்குட்படுத்துகின்றனர். இன்னும் சிலர் கூட்டமைப்பை விட்டு விலகிச் சென்றுவிட்டனர். தமிழினம் மீது நேசம்மிக்க கல்வியலாளர்களும் ஊடகவியலாளர்களும் கூட்டமைப்புக் கட்சிகளில் உள்ள ஒரு சில உறுப்பினர்களால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அரசியல் அனர்த்தங்களை, எமதினம் சந்திக்கக்கூடிய அவலங்களை சுட்டிக்காட்டி எச்சரித்து வருகின்றனர்.

கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகப் பிரிவு விடயத்திலும், மட்டக்களப்பு மாவட்ட எல்லையோரக் கிராமங்களும் மேய்ச்சல் தரைகளும் காவு கொள்ளப்படும் விடயத்திலும், தமிழர்களின் பூர்வீகத்தின் அடையாளமாக விளங்கும் திருக்கோணேஸ்வரத்தின் நிலங்களும் மாண்புகளும் தொல்லியல் துறையால் பௌத்தமயமக்கப்படும் விடயத்திலும், முல்லைத்தீவு மாவட்டத்தின் தென் பிரதேசம் சிங்கள மயமாக்கப்படும் விடயத்திலும், திட்டமிட்டுக் குடியேற்றப்பட்ட சிங்களக் கிராமங்கள் வவுனியா வடக்குப் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டு இனப்பரம்பல் மாற்றப்படும் விடயத்திலும், தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகள் கையறு நிலையில் நிற்கிறது. பிரதேச மக்களின் உணர்வுகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகளின் பிரதேச செயற்பாட்டாளர்கள் வெகுவாக சிரமப்படுகின்றார்கள்.

மூன்று கட்சிகளுடன் இயங்குகின்ற, சர்வதேச ரீதியாக தமிழர்களின் பிரதிநிதிகளாக அங்கீகரிக்கப்படுகின்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னை ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக இதுவரையிலும் வடிவமைத்துக் கொள்ளாதிருப்பதும், தற்போது நடைமுறையில் இருக்கும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவும் போதிய செயற்பாடின்றி பலவீனப்பட்டிருப்பதும், நாடாளுமன்றக் குழுவை வழி நடாத்தவும் தேவையேற்படும்போது கட்டுப்படுத்தவும் தவறுவதுமே மேற்படி நிலைமைகளின் பிரதான காரணமாகும்.

ஒவ்வொரு கட்சியினதும் தீர்மானங்களிலும், உன்னதமான உயிர்த் தியாகங்களின் வழியில் நீண்ட காலம் தம்மை போராட்டத்துடன் இணைத்துக் கொண்டவர்கள் பிரதான பங்கினை வகிக்கும் நிலைமையே பெரும்பாலும் காணப்படுகின்றது. அவ்வாறான கட்சிகளின் ஒருங்கிணைப்புக்குழு மக்களின் நலன் சார்ந்து சிந்தித்தாலும் கூட சில நாடாளுமன்றப் பிரதிநிதிகள் தாம் சார்ந்த கட்சியின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணான போக்கையே பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். இவ்வாறானவர்களை கட்டுப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை எடுக்க முடியாத நிலையிலேயே சம்பந்தப்பட்ட கட்சித் தலைமைகளும் உள்ளன.

முரண்பாடுகளின் மொத்த வடிவமாக, தன்னிச்சையாக செயற்படும் இவ்வாறான பிரதிநிதிகளால் எமது இனத்தின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுவது ஏற்புடையது அல்ல. கூட்டமைப்பின் சமகால தலைமைத்துவப் பலவீனம் கூட்டமைப்பின் கட்சிகளுக்குள்ளும் கட்சிகளிற்கிடையிலும் நெருக்கடிகளை தொடர்ச்சியாக வளர்த்து வருகின்றது. தனி மனித சிந்தனைகளும் செயற்பாடுகளும் மக்கள் போராட்டங்களை வென்று கொடுத்ததாக எக்காலத்திலும் வரலாறு எழுதப்படவில்லை. தமிழர் தாயகத்தின் தலைநகரம் இன்று தமிழர்களின் கரங்களில் இருந்து முற்றாக கைநழுவிப் போவதை பற்றிக் குரலெழுப்பக்கூட முடியாமலிருப்பதன் காரணமும் இதே பிற்போக்குத்தனமான தனி மனித சிந்தனை மற்றும் செயற்பாடுகளின் விளைவுகள்தான்.

இயலுமானளவு விரைவாக கூட்டமைப்பு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட வேண்டும். அதற்கிடைப்பட்ட காலத்தில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு பலம் மிக்கதாக, தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் திராணி மிக்கதாக, விலகிச் சென்றவர்களையும் புதியவர்களையும் உள்ளீர்க்கக்கூடிய ஜனநாயகப் பண்புகளைக் கொண்டதாக தன்னை நிலை நிறுத்தியாக வேண்டும். அவ்வாறானதோர் ஒருங்கிணப்புக் குழுவின் தீர்மானத்திற்கமையவே, தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகள் சம்பந்தமான விடயங்களில், நாடளுமன்றக் குழு செயற்பட வேண்டும் எனும் நிலை விரைவாக உருவாக்கப்பட வேண்டும்.

இவ்வாறானதோர் கட்டமைப்பு மற்றும் நடைமுறை சார்ந்த மாற்றத்தைக் கொண்டு வருவதன் மூலமும், தமிழ்த் தேசத்தை நேசிக்கும் அனைத்துத் பிரிவினரையும் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு சமமான உப அமைப்புகளாக இணைத்துக் கொள்வதன் மூலமும் மட்டுமே எமது மக்களின் உரிமைப் போராட்டத்தில் முன்னேற்றத்தைக் காண முடியும் என்பது எமது தெளிவான நிலைப்பாடாகும்.

சர்வதேச மனித உரிமைச் சட்டங்களின் பிரகாரமும், தேசிய இனமொன்றிற்கான சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையிலும் இலங்கைத்தீவின் தமிழ் மக்கள் சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொள்ள, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்) தொடர்ந்தும் ஒற்றுமையோடும் வலிமையோடும் அர்ப்பணிப்போடும் செயற்படும் என இன்றைய நாளில் வெளிப்படுத்தி நிற்கிறோம்.

ஊடகப் பிரிவு
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)
18.09.2022