இலங்கைக்கு இந்தியாவிடம் இருந்து மேலதிக உதவிகள் கிடைக்காது என்று வெளியாகிய செய்தி அறிக்கைகளை இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், இன்று (20) விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு இந்தியாவிடம் இருந்து மேலதிக உதவிகள் கிடைக்காது என்று செய்திகள் வெளியாகியிருந்ததாகவும் இலங்கை மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை நிவர்த்தி செய்வதற்காக இந்தியா இந்த வருடம் 4 பில்லியன் டொலர் இருதரப்பு உதவிகளை வழங்கியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் ஆரம்பகால பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சிக்காக இலங்கையின் முக்கிய பொருளாதார துறைகளில் இந்தியாவிடமிருந்து நீண்டகால முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம், சாத்தியமான அனைத்து வழிகளிலும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று இந்தியா உறுதியளித்துள்ளது.

கிட்டத்தட்ட 4 பில்லியன் டொலர் நிதி உதவியை இந்த வருடம் வழங்கிய இந்தியா, நீண்ட கால முதலீடுகள் மூலம் இலங்கைக்கு ஆதரவளிக்கும் என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளில் விரைவாக ஆதரவளிக்கும் ஏனைய இருதரப்பு மற்றும் பலதரப்பு பங்காளிகளுக்கும் இந்தியா வாதிடுவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இருதரப்பு அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.