முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632 ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும், நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் இன்றையதினம் (21) குருந்தூர்மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பாக குருந்தூர் மலை அடிவாரத்தில் ஒன்றுகூடிய மக்கள், பல பதாதைகளைத் தாங்கியவாறும்,கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து குருந்தூர்மலையின் மேற்பகுதிக்குச்சென்ற மக்கள் அங்கும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா கடந்த 19.06.2022அன்று குருந்தூர்மலைக்கு விஜயம்செய்து, இதற்குமேல் கட்டுமானப்பணிகள் எதனையும் மேற்கொள்ளக்கூடாது எனக் கட்டளை பிறப்பித்திருந்தார்.
இருப்பினும் தற்போதும் அங்கு நீதிமன்றத்தின் கட்ளையை மீறி பௌத்த கட்டுமானப்பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் பாரியளவில் ஆயுதந் தாங்கிய பொலீசார் குவிக்கப்பட்டடதுடன், ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் புகைப்படங்களையும் எடுத்திருந்தனர்.
பொலிசாரின் இத்தகைய நடடிக்கையைக் கண்டித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், குருந்தூர்மலையில் கட்டுமானப் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படக்கூடாது என்ற நீதிமன்றக் கட்டளையினை நடைமுறைப்படுத்துமாறும் பொலீசாரிடம் தெரிவித்தனர்.
மேலும் இவ்வார்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் வடமாகாணசபை அமைச்சர் கந்தையா சிவநேசன், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சுகாஸ், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் ஜோன்சன், கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் ஜீவன் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.