பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக அரசாங்கத்தினால்  உருவாக்கப்பட்டுள்ள  தேசிய பேரவையில்  7 தமிழர்களும் 5 முஸ்லிம்களும் உறுப்பினர்களாக உள்வாங்கப்பட்டுள்ளனர்.

கடந்த 20ஆம் திகதியன்று பாராளுமன்ற அங்கீகாரத்தை பெற்ற தேசிய பேரவையின் நியமனங்கள் தொடர்பில்  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இன்று (23) சபைக்கு அறிவித்தார்.

இதன்படி,  தேசிய பேரவையின் தலைவராக சபாநாயகர் செயற்படுதுடன் பிரதமர் தினேஷ் குணவர்தன,  சபை முதல்வர்  அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ஆளுந்தரப்பு பிரதமகொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோருடன் கட்சிகளின் பிரதிநிதிகள் 27 பேர் இந்த தேசிய பேரவையில் செயற்படுவார்கள் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தெரிவு செய்த 35க்கும் குறைந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசிய பேரவைக்கு நியமிக்கப்படவேண்டுமென்ற விதி முறைக்கமைய 27 உறுப்பினர்கள் அரசியல் கட்சிகளிலிருந்து நியமிக்கப்பட்டுள்ளனர்.இதில்  டக்ளஸ் தேவானந்தா, நஸீர் அஹமட், சிசிர ஜெயகொடி ஜோன்ஸ்ட்ன் பெர்ணான்டோ, டிரான் அலஸ், சிவநேசத்துரை சந்திரகாந்தன், பவித்ரா வன்னியாராச்சி, வஜிர அபேவர்த்தன, ஏ.எல்.எம் அத்தாவுல்லா , திஸ்ஸ விதாரன, ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, பழனி திகாம்பரம், மனோ கணேசன், ரோஹித்த அபேகுணவர்த்தன, நாமல் ராஜபக்‌ஷ, அலி சப்ரி ரஹீம், ஜீவன் தொண்டமான், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அத்துரலியே ரத்தன தேரர், அசங்க நவரட்ன, சி.வி விக்னேஸ்வரன் ,வாசுதேவ நாணயக்கார,வீரசிங்க வீரசுமண மற்றும் சாகர காரியவசம் ஆகியோர் உறுப்பினர்களாக  செயற்படுவார்கள் என்றும்  சபாநாயகர் அறிவித்துள்ளார்.பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான குறுகிய, நடுத்தர பொது குறைந்தபட்ச வேலைத்திட்டம் தொடர்பில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்தல் , அமைச்சர்கள் விசேட தெரிவுக்குழுக்களின் தலைவர்கள், இளைஞர் அமைப்புகளை கண்காணிப்போரின் பங்குபற்றுதலுடன் விசேட கூட்டத்திற்கான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்தேன் மற்றும் குறுகிய, நடுத்தர, நீண்ட கால தேசிய கொள்கைகளை தயாரிப்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்குரிய முன்னுரிமைகளை நிர்ணயித்தல் ஆகியன  தேசிய பேரவையின் பொறுப்பாகும். தற்போது அமுலிலுள்ள தெரிவுக்குழுக்களிடமிருந்து அறிக்கைகளை பெற்றுக்கொள்ளும் இயலுமையும் தேசிய பேரவைக்கு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.