அரச இரகசியங்கள் சட்டத்தின் கீழ் அதி உயர் பாதுகாப்பு வலயங்களை ஸ்தாபித்து வௌியிடப்பட்ட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானியை இரத்து செய்யும் வகையில், ஜனாதிபதி வர்த்தமானியொன்றை வௌியிட்டுள்ளார். சில இடங்களை அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி கடந்த வாரம் வௌியிடப்பட்டது.
பாராளுமன்ற கட்டடத்தொகுதியை அண்மித்த பிரதேசம், உயர் நீதிமன்ற வளாகம், மேல் நீதிமன்ற வளாகம், கொழும்பு நீதவான் நீதிமன்றம், சட்டமா அதிபர் திணைக்களத்தை அண்மித்த பிரதேசம், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை கடற்படை தலைமையகம், பொலிஸ் தலைமையகத்தை அண்மித்த பகுதிகள், அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிடப்பட்டிருந்தன.
அக்குரகொட பாதுகாப்பு அமைச்சு, இராணுவ தலைமையகம், விமானப்படை தலைமையகம், பிரதமர் அலுவலகம், அலரி மாளிகை, பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படைத்தளபதிகளின் வீடுகள் அமைந்துள்ள பிரதேசங்கள் என்பனவும் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டிருந்தன.
அரச இரகசிய சட்டத்தின் கீழ் அதி உயர் பாதுகாப்பு வலயங்களை அறிவிப்பது, அந்த சட்டத்தின் விடயதானங்களுக்கு உட்படாதது என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியதுடன், அதற்கு எதிர்ப்பையும் வௌியிட்டிருந்தனர்.
இந்த நிலையில், அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான வர்த்தமானியை இரத்து செய்து புதிய வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வௌியிட்டுள்ளார்.