புனர்வாழ்வுப் பணியக சட்டமூலம் குறித்த ஏற்பாடுகள் நீதித்துறை மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் என்று உயர்நீதிமன்றத்துக்கு இன்று (03) அறிவித்த சட்டமா அதிபர், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தில் சில திருத்தங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது என்றும் அறிவித்தார்.

நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ கடந்த 23 ஆம் திகதி புனர்வாழ்வு பணியகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

அந்த சட்டமூலம் நாட்டை இராணுவமயப்படுத்துவதற்கு வழிவகுக்கும் அரசியலமைப்புக்கு முரணான சட்டமூலம் என தீர்ப்பளிக்குமாறு கோரி  சட்டத்தரணி அமில எகொடமஹவத்த உயர் நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை (29) விசேட தீர்மான மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

மேலும், குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர், எஸ்.எம்.மரிக்கார் வெள்ளிக்கிழமையன்று (30) அடிப்படை உரிமைகள் மனுவொன்றை தாக்கல் செய்தார்.

குறித்த மனுக்கள், பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபரால் மேற்குறிப்பிட்ட விடயம் மன்றுக்கு அறிவிக்கப்பட்டது.

அரசியலமைப்பின் 3 மற்றும் 4 வது பிரிவுகளை குறித்த சட்டமூலம் மீறும் என்றும் நாட்டு மக்களுக்கு சொந்தமான நீதிமன்ற அதிகாரம், நீதிமன்றத்தின் உத்தரவின்றி பணியகத்திடம் ஒப்படைக்கப்படுவதாகவும், சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அது நீதிமன்ற அதிகாரத்தை சூறையாடும் எனவும் சட்டத்தரணியின் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தீவிர அல்லது அழிவுகரமான செயல்களில் ஈடுபடும் வழி தவறிய போராளிகளுக்கு புனர்வாழ்வு என முன்னுரையில் கூறப்பட்டாலும், குறிப்பிட்ட வரையறை எதுவும் உள்ளடக்கப்படாமையின் காரணமாக கடந்த கால தவறுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கூட புனர்வாழ்வு அளிக்கும் அதிகாரம் இராணுவத்தினருக்கு வழங்கப்படும் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மக்களின் பேச்சு, கருத்துச் சுதந்திரம் , அமைதியான போராட்ட சுதந்திரம் ஆகியவற்றை முற்றிலும் நசுக்கும் வகையிலான இந்த சட்டமூலத்தை  சபையின் 2/3 பெரும்பான்மைக்கு மேலதிகமாக வாக்கெடுப்பின் மூலம் மக்களின் ஆணை தேவை என்று அறிவிக்குமாறு மனுதாரர் கோரியுள்ளார்.

வழி தவறிய போராட்டக்காரர்கள், அடிப்படைவாதிகள்,  நாசகார செயலில்  ஈடுபடுவோர் அல்லது போதை மருந்துகளுக்கு அடிமையானோருக்கான புனர்வாழ்வு செயற்பாட்டை திறம்பட செயலாற்றுவதற்காக இந்த பணியகம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

பணியகத்தின் செயற்பாடுகள், நிர்வாகம், முகாமைத்துவம் என்பவற்றுக்கு சபையொன்றை ஸ்தாபிக்கப்பட்டு, பாதுகாப்புக் கல்வி , சுகாதாரம் , புனர்வாழ்வு உள்ளிட்ட துறைசார் அமைச்சுகளின் செயலாளர்கள் அதற்கென நியமிக்கப்படவுள்ளனர்.

தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ்மா அதிபர் அல்லது பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோரும் அதில் உள்ளடக்கப்படவுள்ளனர் .