சபைக்கு தலைமை தாங்குகின்ற கௌரவ உறுப்பினர் அவர்களே!

இன்று இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்கள் இந்த உயரிய சபையிலே இன்று இந்த நாடு இருக்கின்ற நிலைமையும், இந்த நாட்டை, இந்த பொருளாதார சிக்கலை எப்படியாக தான் நிவர்த்தி செய்வதற்கான முன்னெடுப்புக்களை எடுப்பது பற்றியும் கூறியிருந்தார்.

அதிலே அவர் பல விடயங்களைக் கூறியிருந்தார். ஒன்று கடன் மீளமைப்பு சம்பந்தமாக தான் பல நாட்டு தலைவர்களுடனும் முக்கியமாக எங்களுடைய நாடு கடன் கொடுக்க வேண்டிய தலைவர்களுடனும், பிரதமர்களுடனும் பேசியிருப்பதாகவும், முக்கியமாக சைனாவுடன் பேசியபோது அவர்களுடைய கொம்யூனிஸ்ட் கட்சியினுடைய மகாநாட்டுக்குப் பிறகு மீண்டும் பேச வேண்டியிருப்பதாகவும், இந்தியப் பிரதமருடனும் கதைத்திருப்பதாகவும் அவர் உதவிகள் செய்வதாக கூறியதாகவும் பல விடயங்களை எடுத்துக் கூறினார்.

அதுபோல காலபோகத்திற்கான இந்த உரத்தைப் பற்றியும் கூறியிருந்தார். ஆனால் இது இப்போது கொஞ்சக் காலமாக சொல்லப்பட்டுக்கொண்டு வருகிறது உரம் உரம் என்று, ஆனால் உண்மையிலேயே வடக்கு கிழக்கில் விவசாயிகளுக்கு இது சரியான முறையிலே கிடைக்கவில்லை. அவர்கள் இப்போது நெல்லு விதைக்கவேண்டிய காலம். அவர்கள் நெல்லை விதைப்பதா விடுவதா என்று மிகவும் சிந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஏனென்றால் உரம் கிடைக்குமா என்ற ஓர் ஐமிச்சம், அதைவிட ஐமிச்சம் இந்த மழை பெய்யுமா என்று, இன்று அங்கு வடக்கிலே மழை பெய்கின்றது. கிழக்கிலே இல்லை. ஆகவே வடகிழக்கு முழுக்க மழையும் பொய்த்துக்கொண்டு இருக்கின்றது. அதேநேரம் இந்த உரப்பிரச்சினையும் இருக்கின்றது. இப்படியாக பல பிரச்சினைகளுக்கு எங்களுடைய மக்கள் முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அது இங்கேயும் தான். தனியே வடக்கென்று சொல்வதில் நியாயமில்லை. இந்தப் பகுதிகளிலும்கூட இப்படியான நிலைமைகள் இருக்கின்றது.

இன்று இந்த அரசாங்க உத்தியோகத்தர்களை அல்லது நிரந்தர வருமானத்தில் இருக்கக்கூடிய, வெளி இடங்களிலும் வேலைசெய்யக்கூடிய உத்தியோகத்தர்கள் – இவர்களையெல்லாம் எடுத்துக்கொண்டால், இவர்களெல்லாம் இந்தப் பிரச்சினைகள் வருவதற்கு முன்பு ஒரு நடுத்தட்டு வர்க்கமாக இருந்தவர்கள். இன்று இவர்கள் ஏறக்குறைய வறுமைக்கோட்டுக்கு கீழ்நிலைக்கு வந்துவிட்டார்கள். நாங்கள் பலரிடம் கதைக்கின்றபோது அவர்கள் ஒரு விசயத்தைக் கூறுகிறார்கள். வெட்கத்தை விட்டுக் கூறுகிறோம், இரண்டு நேரம் சாப்பிடுகிறோம், சிலவேளைகளில் நாங்கள் உண்ணாமல் இருந்து பிள்ளைகளுக்குக் கொடுக்கின்றோம் என்று. அவ்வளவு ஒரு மிகக் கஸ்டமான நிலைமையை இந்த நாடு முகங்கொடுக்கின்றது.

இன்று அடிப்படையாக அது மலையத்திலாக இருக்கலாம், இங்கு இருக்கலாம், இந்த நாடு முழுவதையும் எடுத்துக் கொண்டாலும் கோதுமை மா என்பது எங்களுடைய உணவில் ஒரு மிகப் பிரதானமான விசயம். முக்கியமான வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழக்கூடியவர்களுடைய உணவிலே அது ஒரு மிக முக்கியமான விசயம். பாண், அதைவிட றொட்டி, இப்படியான விசயங்கள். இது நாளாந்தம் உயர்ந்து இப்போது 400 ரூபாவுக்கு மேலே ஆகிவிட்டது. இப்போது 430, 450 ரூபாய். ஆகக்குறைந்தது இந்த கோதுமை மாவையாவது இந்த மக்கள் வாங்கக்கூடிய வகையில் அதாவது, மக்களுக்கு ஏற்றளவு விலையிலே கொடுக்கக்கூடிய அளவிற்கு நீங்கள் அதைக் குறைக்க வேண்டிய கட்டாயக் கடமையிருக்கின்றது. அதற்கான மானியத்தைக் கொடுத்து கோதுமை மா அவர்களுக்கு ஓரளவு நியாயமான விலையிலே கிடைப்பதற்கு அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இந்த மக்கள் பட்டினியிலே சாவதுதான் என்ற ஒரு நிலைமைக்கு இட்டுச்செல்லும். ஏனென்றால் அதுதான் அவர்களுடைய ஒரு அடிப்படையாக இருந்தது.

அதைவிட ஜனாதிபதி அவர்களுடைய பேச்சிலே, அவர் வெளிநாடுகளிலே தான் எப்படியாக இந்த கடனை மீளமைப்பது என்பது சம்பந்தமாகப் பேசிக் கொண்டிருக்கின்றபோது, இந்த நாடுகளைப் பற்றியெல்லாம் எங்களுடைய வெளிநாட்டமைச்சர் நேற்று ஒரு அறிக்கை விட்டிருந்தார். ஐக்கிய நாடுகள் சபையினுடைய மனித உரிமைப் பேரவையில், அவர்கள் இலங்கைமேல் தேவையில்லாத அழுத்தத்தை எல்லாம் தருகிறார்கள் என்று, அது தேவையில்லாத அழுத்தம் என்று அவர் கருதுகின்றார். இலங்கை விட்ட தவறுகளை திருத்த வேண்டும். அதை சரியாக செய்ய வேண்டும். மனித உரிமைகள் சரியாக நடத்தப்பட வேண்டும். அதேபோல தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வைக் காணவேண்டும். இப்படியான விசயங்களை நாங்கள் கூறுகிறோம். நாங்கள் கடந்த காலங்களிலே மிக நீண்டகாலமாக உள்நாட்டிலே இதைத் தீர்க்கலாம் என்று முயற்சித்தபோது, அது எந்தக் காலத்திலேயுமே நடைபெற்றதில்லை. பல ஒப்பந்தங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பல கூட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. எவையுமே சரியாக நிறைவேற்றப்படவில்லை.

எங்களுடைய ஜனாதிபதி அவர்கள் கடந்த அரசாங்கத்திலே பிரதமராக இருந்தபோதுகூட ஒரு புதிய அரசியலமைப்பு கொண்டுவரலாம் என்று ஒரு மிக நீண்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது. அதுகூட ஒரு முறையற்ற நிலையிலே இருக்கின்றது.

இப்படியாக உள்நாட்டு நிலைமைகள் சரியாக இல்லாத காரணத்தினால்தான் நாங்கள் வெளியிலே சென்று கேட்கவேண்டிய நிலைமை. இந்த 13ஆவது திருத்தத்தை எடுத்துக் கொண்டால்கூட இந்த 22ஆவது திருத்தம் என்று வருவதாக இருந்தது. இதிலே இரண்டு திருத்தங்கள். ஓன்று 13ஆவது திருத்தம். மற்றது 16ஆவது. இந்த 13ஆவது திருத்தமானது தமிழ் மக்களுக்கு ஒரு முழுமையான தீர்வு என்று நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தாலும் அது எழுத்திலே இருக்கக்கூடிய ஒரு தீர்வாக இருக்கின்றது. அதை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், ஒரு அரசியலமைப்பிலே இருக்கின்ற ஒரு திருத்தத்தை அமுல்நடத்துங்கள் என்று வேறு ஒரு நாட்டிடம் கேட்டு அவர்கள் சொல்லவேண்டிய ஒரு நிலைமை இந்த நாட்டுக்கு இருக்கின்றது. இது நான் நினைக்கவில்லை உலகத்திலேயே வேறு எந்த ஒரு நாட்டிலும் இருக்க முடியும் என்று. ஒரு நாடு ஒரு அரசு அதனுடைய கடமை அரசியலமைப்பை அமுல்நடத்துவது. அதைக்கூட செய்வதற்கு நீங்கள் தயங்கிக்கொண்டு அதைக்கூட செய்யாமல் விட்டு வேறு நாடுகள் வந்து தலைவைக்கின்றது அழுத்தங்கள் கொடுக்கின்றது என்று சொல்வதிலே ஒரு அர்;த்தம் இருக்கமுடியும் என்று நான் நினைக்கவில்லை.

உள்நாட்டிலே கேட்டோம், நடக்கவில்லை. ஆகவே நாங்கள் வெளிநாடுகளிலே கேட்கின்றோம்.
நண்பர் சுமந்திரன், பல தடவைகள் ஐக்கிய நாடுகள் சபையினுடைய மனித உரிமைப் பேரவையிலே சென்று அங்கு தன்னால் இயன்றளவு முயற்சிகளைச் செய்கிறார். அதேபோல பல அங்கத்தவர்கள், வெளிநாட்டிலே இருக்கக்கூடிய எங்களுடைய புலம்பெயர் தமிழர்கள் பல முயற்சிகளை செய்கிறார்கள்.

ஏனென்றால் எங்களுக்குள் இங்கு உள்ளுக்குள் ஒரு தீர்வு வருமென்ற நம்பிக்கை ஒன்றும் இல்லாத காரணத்தினால்தான். ஆகவே அதை நீங்கள் செய்து முடியுங்கள். வெளிநாடுகள் நிச்சயமாக உங்களுக்கு அழுத்தம் தரமாட்டாது.

நாங்கள் இந்த 13ஆவது திருத்தம் நீங்கள் கொண்டுவந்தது, அதை அமுல்நடத்துவதற்கு ஏதாவது நடவடிக்கை எடுங்கள் என்று இந்தியாவைக் கேட்கிறோம், எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. ஆகவேதான் கேட்கின்றோம். ஆகவே, நீங்கள் எங்களிலும் குறைசொல்ல முடியாது. வெளிநாடுகளிலும் குறைசொல்ல முடியாது. உங்களை நீங்களே திருத்திக்கொள்ள வேண்டும். திருத்திக்கொள்ளத் தவறினால் இது தொடர்ந்துகொண்டே இருக்கும்.

ஒரு விசயத்திலே நான் நிச்சயமாக காலையிலே எரிபொருள் அமைச்சர் பேசுகின்றபோது இந்த வரிசைகளை குறைத்தது பற்றி கூறினார். மிக நீண்ட வரிசைகள், அதாவது நான்கு ஐந்து மாதத்திற்கு முன்பு எரிபொருளுக்கும் எரிவாயுவுக்கும் கிலோமீற்றர் கணக்கான வரிசைகளை எங்கும் பார்த்தோம். நாடு முழுக்க குழம்பின ஒரு நிலையினைப் பார்த்தோம். இன்று உண்மையிலேயே வரிசைகள் இல்லாமலேயே செய்யப்பட்டிருக்கின்றது. அதை பாராட்டவேண்டும். எரிபொருள் அமைச்சரை மாத்திரமல்ல அந்த கியூஆர் சிஸ்டத்தை கொண்டுவந்ததுக்கு மாத்திரமல்ல ஜனாதிபதி அவர்களையும்தான். ஏனென்றால் வெளிநாடுகளிலே இன்றும் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு இருக்கின்றது. பிரச்சினைகள் இருக்கின்றது. இங்கும் அந்தப் பிரச்சினை இருக்கின்றது. இருந்தாலும் ஒருவருக்கு காணக்கூடிய விதத்திலே எரிபொருளையும் எரிவாயுவையும் இன்று கொடுக்கக்கூடியதாக இருக்கின்றது என்பதை நாங்கள் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. ஆகவே நாங்கள் அந்த விசயத்திலே அரசாங்கத்தை நிச்சயமாக பாராட்ட வேண்டியிருக்கின்றது.

எவ்வளவோ கஸ்டத்திற்கு மத்தியிலே பொருளாதாரத்திலே மிகப் பின்னடைவாக இருந்த நாட்டை ஓரளவுக்குத் தன்னும் கொண்டுவருவதற்கு. இது நிச்சயமாக போதாது என்பது எங்களுக்குத் தெரியும்.

முதலாவதாக இந்த பட்டினியிலே இருக்கின்ற குழந்தைகள் பாடசாலைகளுக்கு உணவு உண்ணாமல் செல்லுகின்ற குழந்தைகள் இவைகளுக்கு ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். அது செய்யப்படுகின்றது என்று சொல்லப்படுகிறது. அவைகள் ஒழுங்கான முறையிலே மக்கள் மத்தியிலே போய்ச்சேரவேண்டும். இதை செய்வதன்மூலம் இந்த நாட்டிலே இருக்கக்கூடிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நிச்சயமாக நடவடிக்கை வேண்டும்.

ஒரேயொரு விடயத்தை நான் கூற விரும்புகின்றேன். நாங்கள் மீண்டும் மீண்டும் கூறுவது இதுதான். இந்த நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணமான இருந்தது இந்த இனப்பிரச்சினையும் ஒன்று. 13ஆண்டுகள் யுத்தம் முடிந்தும் பாதுகாப்பு அமைச்சுக்கு இன்றும் அதேயளவு அல்லது அதற்கும் மேலாகவும் பணம் ஒதுக்கப்படுகின்றது. எதற்காக என்று எவருக்குமே தெரியவில்லை. ஆனால் கல்விக்கோ சுகாதாரத்திற்கோ அதற்கு அரைவாசிக்கும் குறைவான, அதாவது இரண்டுக்குமே சேர்த்து அரைவாசிக்கும் குறைவான நிதிதான் வரவுசெலவுத் திட்டத்திலே ஒதுக்கப்படுகின்றது. இவைகளெல்லாம் வீண் விரயமாகும்.

இந்த ஊழல் விசயத்திலே தனியே அரசியல்வாதிகளைக் குறைசொல்லிப் பிரயோசனமில்லை. அதற்காக முழுப்பேருமே, 225பேரும் நிச்சயமாக ஊழல் செய்யவில்லை. ஒரு கொஞ்சப்பேர் செய்கின்ற விசயம். அது ஏதோ மக்கள் மத்தியிலே அரசியல்வாதிகள் என்றால் ஊழல்வாதி என்ற ஒரு நிலைப்பாட்டை உருவாக்கியிருக்கின்றது. இந்த நாடு ஊழலால்தான் அழிந்தது என்பது உண்மை. அதை எவருமே மறுக்கமுடியாது. அதைத் திருத்தவேண்டும். அதற்காக சட்டம் கொண்டுவரவேண்டும். அந்த சட்டத்தின்மூலம் சரியான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். எந்த மட்டத்தில் இருப்பவர் ஊழல் செய்தாலும் அவருக்கு சரியான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அதை வழங்குவதன் மூலம்தான் இந்த நாட்டை ஓரளவுக்குத்தன்னும் திருத்தியெடுக்க முடியும். பொருளாதார ரீதியாக வளர்த்தெடுக்க முடியும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு.

ஆகவே, அரசு செய்யவேண்டிய விசயங்கள் ஒன்று இந்த ஊழல், அடுத்து இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வு. இவைகளை வைப்பதன்மூலம் இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும். இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வை வைப்பதன் மூலம்தான் நாங்களும் இலங்கையர்கள் தான் என்ற அந்த மன இறுமாப்புடன் உங்களுடன் சேர்ந்து இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி.