தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மற்றும் ஜேர்மன் ஸ்டுட்கார்ட் நகர தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் நேற்று (06.10.2022) வியாழக்கிழமை ஜேர்மன் ஸ்டுட்கார்ட் நகரில் நடைபெற்ற தமிழ் மொழி, பண்பாடு மற்றும் வரலாறு பன்னாட்டு பரவல் தொடர்பான சிறப்புச் சொற்பொழிவு நிகழ்வில் தமிழக அரசின் தொழில் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் கலந்துகொண்டு தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகள் என்னும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தியிருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் ஜேர்மன் கிளையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டடிருந்த நிலையில் கிளையின் சார்பில் கிளைப் பொறுப்பாளர் திரு. ந.பவானந்தன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.

மேற்படி நிகழ்வினைத் தொடர்ந்து தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுடன் தனியே
சந்திப்பொன்றும் அங்கு இடம்பெற்றிருந்தது. அந்த சந்திப்பில் இலங்கை மக்கள் இடர்பட்டிருந்தபோது அவர்களுக்கு தமிழக முதல்வர் ஆற்றிய உதவியை நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோமென்றும், அதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறிய திரு. பவானந்தன் அவர்கள் தங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கும் நன்றி கூறுகின்றேன் என்றார். இதன்போது தமிழகத்திற்கு நீங்கள் எப்பொழுது வந்தாலும் நிச்சயமாக எந்த தடையுமின்றி என்னைச் சந்திக்கலாமென்று கூறி சந்திப்புக்கான சந்தர்ப்பத்தையும் அமைச்சர் வழங்கியிருந்தார்.

இந்த சந்திப்பில் தமிழக அரசின் தொழில் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சைச் சேர்ந்த திரு. பாலச்சந்திரன், தமிழ்நாடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் கௌதம் சனா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.