பிரதான மற்றும் கரையோர மார்க்கங்கள் ஊடாக கொழும்பிற்கு பயணிக்கும் ரயில்கள் தாமதமாகியுள்ளன. சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக ரயில்கள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் பல ரயில் சேவைகள் தாமதமடையும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த உத்தராதேவி நகர்சேர் ரயில், தம்புத்தேகம மற்றும் செனரத்கம பகுதிகளுக்கு இடையில் தடம்புரண்டுள்ளது.

இதனால் வட மார்க்க ரயில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை,  இன்று முதல் வார இறுதி நாட்களில், அநுராதபுரத்திற்கு விசேட கடுகதி ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அநுராதபுரம் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்திரிகர்களுக்காக இந்த விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படுவதாக திணைக்களம் கூறியுள்ளது.

சனிக்கிழமைகளில் காலை 9.20 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் ரயில் பிற்பகல் 1.42 மணிக்கு அநுராதபுரத்தை சென்றடையவுள்ளது.

இந்த ரயில் அநுராதபுரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு இரவு 9.14 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையவுள்ளது.

குறித்த ரயிலில் 10 குளிரூட்டப்பட்ட பெட்டிகளுடன் மொத்தம் 480 இருக்கைகள் காணப்படுவதாக  ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.