நான்கு மாதங்களின் பின்னர் ரஷ்யா மற்றும் இலங்கைக்கு இடையிலான விமான சேவை இன்று(10) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ரஷ்யாவின் எரோப்ளோட்(Aeroflot) விமானம் இன்று(10) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

வாரத்திற்கு 02 நாட்கள் இந்த விமான சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, ரஷ்யாவின் Aeroflot நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்றை இலங்கை அதிகாரிகள் தடுத்து வைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜூன் மாதம் முதல் இலங்கைக்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான விமான சேவை இடைநிறுத்தப்பட்டது.

ரஷ்யாவின் Aeroflot விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றை நாட்டிலிருந்து பயணிப்பதை தடுத்து, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் 02ஆம் திகதி தடை உத்தரவு பிறப்பித்தது.

அயர்லாந்திலுள்ள செலைஸ்டியல் ஏவியேஷன் ட்ரேடிங் லிமிட்டட் என்ற நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்ததன் பின்னர் குறித்த தீர்மானம் அறிவிக்கப்பட்டது.

Aeroflot விமானம் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில், ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவரை அழைத்து ரஷ்ய வௌிவிவகார அமைச்சு தமது அதிருப்தி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.